ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுமா? சி.வி. சண்முகம் விளக்கம்

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டும் அதிகாரம் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
சி.வி. சண்முகம்.
சி.வி. சண்முகம்.

சென்னை: கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தாலே பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கட்சி விதி இருப்பதால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டும் அதிகாரம் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்தின் முன்பு, செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

இதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். அதிமுக கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான விதி என்ன சொல்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அவசியம் எனக் கருதினால் பொதுக்குழுக் கூட்டப்படலாம். அதில், பொதுக்குழு உறுப்பினர்களில், குறைந்த அளவாக ஐந்தில் ஒரு பங்கு வருகை தர வேண்டும். 

மேலும், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில்  ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக் கொண்டால் பொதுக் குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாள்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும் என்று விதி சொல்லியிருக்கிறதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரின் அனுமதிப் பெற்றுத்தான் கூட்டப்பட வேண்டும் என்று சொல்லவில்லை.

பொதுக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இது கட்டாயம். ஆகவே ஓபிஎஸ் கருத்து முழுக்க முழுக்க தவறு என்று சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com