அதிமுகவினரை பிரித்து வேறு கட்சியில் சேர்க்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை விளாங்குடி பகுதியில் ஆர்.ஜே.தமிழ்மணி சாரிட்டபிள் அன் எஜூகேஷனல் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ, மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் எனக் குறிப்பிட்டார். 80 சதவிகிதம் தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கம் அதிமுக இருக்கும் என எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற இலட்சியத்துக்காக தொடங்கப்பட்டது அதிமுக. உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்.
கட்சிக்குள் ஒரு தலைவர், நிர்வாகியை நீக்குவது சாதாரணம். அதுபோலத்தான் கருணாநிதி எம்ஜிஆரை நீக்கினார். நீக்கப்பட்ட எம்ஜிஆருக்கு பொதுமக்கள் அமோக ஆதரவை கொடுத்தனர். சாதாரண இயக்கமல்ல அதிமுக.
சாதிய ரீதியாக பிரிவினை ஏற்படுத்துவப்பவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் இடம்கொடுக்க கூடாது. அதிமுக தொண்டர்கள் எப்போதும் சாதி, மதம், பார்ப்பதில்லை, மதச்சார்பற்றவர்களாகவே இருந்து வருகிறது.
அதிமுக தொண்டர்களை பிரித்து தேசிய கட்சியில் சேர்த்துவிடலாம் என்று யாரவது நினைத்தால் அது நடக்காது. அதிமுக மக்கள் இயக்கம் என்பதால், புத்துணர்ச்சியோடு மீண்டு எழும். இது திராவிட பூமி. தந்தை பெரியாரின் திராவிட உணர்வு நிறைந்த மண். மாற்று சக்தி வரக்கூடாது என நினைத்த பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை கடைப்பிடிப்பது அதிமுக.
திமுகவில் எளிய தொண்டன் முதல்வராக முடியுமா? அந்தக்கட்சியில் ஜனநாயகம் உள்ளதா? திமுக ஆட்சியில் ஊடக சுகந்திரம் சினிமா சுதந்திரம் உள்ளதா? தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். உணர்ச்சி வசப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.