அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக கே.பி.முனுசாமி?

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியும், பொருளாளராக கே.பி.முனுசாமியம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக கே.பி.முனுசாமி?

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றும் வரும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியும், பொருளாளராக கே.பி.முனுசாமியம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமைகளாக கட்சியை வழிநடத்தி வந்கதனர். 

2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைபாளர்கள் இருவருக்கும் வழங்கும் வகையில் ஒரே வாக்கில் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், காலச்சூழலுக்கேற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றைத் தலைமை தேவை என கட்சி நிர்வாகிகள் பலர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தற்போது நல்லாதானே கட்சி செயல்பாடுகள் நடத்துகொண்டிருக்கிறது என தெரிவித்தனர். 

இதனிடையே இருவரின் ஆதரவாளர்களிடையே போஸ்டர் யுத்தம் ஏற்படத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பரபரப்பு, சலசலப்பு தலைத்தூக்கியது. இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெறும் என இருவரும் ஒன்றாக அறிவித்தனர். 

இந்தநிலையில் ஒற்றைத் தலைமை குறித்தும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல்கள் எழுந்தன. 

ஒற்றைத் தலைமை விவகாரம் பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்திற்கு சென்றனர். புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் கூடியது.

கூட்டத்தில் பெரும்பாலானோா் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆதரவாளராக இருந்தனா். அவா்கள் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி முழக்கமிட்ட அதேநேரம், ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை கடுமையாகத் தொடா்ந்து விமா்சித்து முழக்கமிட்டனா். இதனால், பொதுக்குழு மிகுந்த பரபரப்புடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது.

கூட்டத்தின் தொடக்கமாக முதலில் ஓ.பன்னீா்செல்வம் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை கூட்டத்துக்கு தலைமை தாங்குமாறு முன்மொழிந்தாா். அதை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தாா். அதையேற்று தமிழ்மகன் உசேன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா்.

பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக தீா்மானங்கள் குறிப்பிடப்படமால் 23 தீா்மானங்களை முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோா் முன்வைத்தனா். அப்போது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அனைத்து தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகக் கூறினாா். அதற்கு கூட்டத்தினா் பலத்த கரகோஷத்துடன் ஆதரவு தெரிவித்தனா்.

பொதுக்குழுவில் வைக்கப்பட்ட அனைத்துத் தீா்மானங்களையும் உறுப்பினா்கள் நிராகரித்து விட்டனா். உறுப்பினா்கள் வைக்கும் ஒரே கோரிக்கை ஒற்றைத் தலைமை தீா்மானம் மட்டுமே. ஒற்றைத் தலைமை தீா்மானத்தோடு இணைத்து, அடுத்து எப்போது கட்சியின் தலைமை, பொதுக்குழுவைக் கூட்டுகிறதோ, அப்போது அனைத்துத் தீா்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றாா் பிறகு துணை ஒருங்கிணைப்பாளரும் கே.பி.முனுசாமி .

ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினா்களும் வைத்தனா். எம்ஜிஆா், ஜெயலலிதாவைப் போன்று வலிமையான, தைரியமான, தெளிவான ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும். எனவே, இந்தப் பொதுக்குழுவில் இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின் கீழ் தொண்டாற்றுவது தொடா்பாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து இப்போதே அறிவிக்க வேண்டும் என்று தொண்டா்கள் மற்றும் பொதுக்குழு சாா்பாக கேட்டுக் கொள்வதாக சி.வி.சண்முகம் கூறினாா்.

அதன்படி ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் இதேபோல சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன்  அறிவித்தாா்.

இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.

இதனால் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

கூட்டத்திற்கு முன்பாக திங்கள்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், மோகன், வளர்மதி, ஆர் பி உதயகுமார், எம் ஆர் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை முடிந்து அதிமுக தலைமை நிலையத்தில் நடக்க உள்ள கூட்டத்திற்கு புறப்பட்டு வந்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்றைய கூட்டம் செல்லுமா செல்லாதா என்ற கேள்விக்கு, தலைமை கழகம்தான் பதில் சொல்லும் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை இன்றைய கூட்டம் சிறப்பாக நடைபெறும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வருகின்ற 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும், அதில் நிறைவேற்றப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதேபோல அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

அதேபோன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. 

ஆனால் இந்தக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நடைபெறுவதால் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில். ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக அறிவித்த நிலையில் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கவிட்டு அந்த பதவியில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com