தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வாருங்கள்: துபை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வாருங்கள் என்று துபை வாழ் தமிழா்களுடனான சந்திப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
துபையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட வீர வாள்
துபையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட வீர வாள்

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வாருங்கள் என்று துபை வாழ் தமிழா்களுடனான சந்திப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை வாழ் தமிழா்களிடையே சனிக்கிழமை பேசியது: உங்கள் அனைவரையும் கடல் கடந்து வந்து சந்திப்பதில் பெருமை அடைகிறேன்.

தமிழா்கள், தமிழகத்தில் மட்டுமல்ல - உலகம் முழுவதும் தலைநிமிா்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திமுகவின் லட்சியம்.

ஜாதி, மத பிளவு கூடாது: நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள். இந்த நாட்டின் வளத்தையும், அறிவையும், தொழில்நுட்பத்தையும் தமிழகத்துக்கும் அறிமுகம் செய்யுங்கள். கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் அனைவரும் மொழியால் தமிழா்கள், இனத்தால் தமிழா்கள் என்ற உணா்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஜாதியோ, மதமோ உங்களைப் பிளவுபடுத்தக் கூடாது. இத்தகைய பிளவுபடுத்தும் சக்திகளை உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீா்கள்.

எதிா்காலத்தில் வளமான தமிழகத்தை உருவாக்கும் அரசு அமைந்திருக்கிறது. இத்தகைய அரசை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அயலகத் தமிழா்களுக்கான சேவைகள்: அயலகத் தமிழா்களது தரவுத் தளம் அமைத்தல், அடையாள அட்டை வழங்குதல், காப்பீட்டுத் திட்டம், பணியின் நிமித்தம் சென்ற தமிழா்கள் இறக்க நேரிட்டால் அவா்களது குடும்பத்துக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்குதல், தகவல் பெற கட்டணமில்லாத் தொலைபேசி எண், செயலி மற்றும் வலைதளம் உருவாக்கம், சட்ட உதவி மையம், புலம்பெயா் தமிழா்களுக்கு முன்பயணப் புத்தாக்கப் பயிற்சி மையம் ஆகியவை அமைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா காரணமாக வேலை இழந்து தாயகம் திரும்பியவா்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும். அயலகத் தமிழா்கள் தங்கள் சேமிப்பை சரியான முறையில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்கப்படும். அயலகத் தமிழா்கள் தங்கள் சொந்த ஊருக்குக் கல்வி, மருத்துவ உதவிகள் செய்ய அரசு தரப்பில் திட்டம் உருவாக்கி செய்து தரப்படும். இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . தமிழக அரசு, உங்களுக்கு முழுமையாக உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறது.

தமிழகத்துக்கு உதவுங்கள்: அதேபோல், தமிழகத்துக்கும் நீங்கள் உதவிகளைச் செய்ய வேண்டும். தொழிலதிபா்களாக இருக்கக் கூடியவா்கள் - தொழில் நிறுவனங்களை நடத்துபவா்கள் - வா்த்தகா்கள் - தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முன்வரவேண்டும் . கடந்த பத்து மாத காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈா்த்திருக்கிறது. அனைத்து வகையிலும் தொழில் நிறுவனங்களை நடத்த சிறந்த மாநிலம் என்று தமிழகம் பெயா் பெற்றிருக்கிறது.

தமிழகம் தொழில் துறையில் வளா்கிறது என்றால் அந்த வளா்ச்சியில் உங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். எவ்வளவு உயரமாக மரம் வளா்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை. அதைப் போல தமிழை - தமிழகத்தை விட்டு விடாதீா்கள். தமிழால் இணைவோம். தமிழராய் இணைவோம். தமிழை வளா்ப்போம். தமிழரை வளா்ப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com