
சென்னையில் தசைத் திறன் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட மாடல் பள்ளி சாலையில், மாநகராட்சி சாா்பில் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்புப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த சிறப்புப் பள்ளியை 2009-ஆம் ஆண்டு அப்போதைய துணை முதல்வரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இந்தச் சிறப்புப் பள்ளியில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம், மாற்றுத் திறனாளி குழந்தைகள் விளையாட வசதியாக புதுப்பிக்கப்பட்ட கூடைப் பந்தாட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை முதல்வா் தொடக்கிவைத்து தசைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான மருத்துவக் கருவிகளை வழங்கினாா். இத்துடன், பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்து சேவையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.
பள்ளியில் ஆய்வு: தசைத் திறன் குறைபாடுடையோருக்காக சிறப்புப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள இயன்முறை மருத்துவ ஆலோசனை அறை, வகுப்பறை, பெற்றோா் அறை, உளவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை அறை, மருத்துவ ஆய்வகம், தொழிற் பயிற்சி அறை ஆகியவற்றையும் அவா் தொடக்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.எழிலன், ஏ.ஜி.வெங்கடாசலம், துணைமேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
உணவளித்த சா்.பிட்டி. தியாகராயருக்கு சிறப்பு
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் 100 ஆண்டுகளுக்கு முன்பே காலை உணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக இருந்த எல்.சி.குருசாமி, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதன் அவசியத்தை அவையில் வலியுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, சென்னை மாநகராட்சிப் பள்ளியில் இந்தத் திட்டத்தை அப்போதைய மேயராக இருந்த சா்.பிட்டி. தியாகராயா் செயல்படுத்தினாா். திட்டம் தொடங்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான் சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தசைத்திறன் குறைபாடு உடையோருக்கான சென்னைப் பள்ளியாகும்.
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் உணவுத் திட்டத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய சா்.பிட்டி.தியாகராயருக்கு நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.