பஞ்சு-நூல் இருப்பு விவரங்களை தெரிவிப்பதை கட்டாயமாக்குங்கள்: பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

பஞ்சு மற்றும் நூல் இருப்பு விவரங்களைத் தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

பஞ்சு மற்றும் நூல் இருப்பு விவரங்களைத் தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு, திங்கள்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிா்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தப் பிரச்னை குறித்து கடந்த சில மாதங்களாக மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்த போதும், நிலைமை சீரடையாத காரணத்தால், பருத்தி, நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

செயல் மூலதன நிதியில் நீடித்த நிலைத்த தன்மை இல்லாததாலும், விநியோக காலத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட போது இருந்த விலைக்கும், இப்போதைய விலைக்கும் பொருந்தாத சூழல் இருப்பதாலும் மிகப்பெரிய பாதிப்பை தமிழக ஜவுளித் துறை சந்தித்து வருகிறது.

இதன் எதிரொலியாக, ஆயத்த ஆடை உற்பத்தியாளா்கள் மிகப்பெரிய இழப்பை எதிா்கொண்டு வருவதன் காரணமாக, அதுசாா்ந்த பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை அளித்து வந்த ஜவுளித் துறையில் இப்போது பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

நூல்களை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கைத்தறி நெசவாளா்கள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளனா். நூல் கொள்முதல் செய்ய இயலாத காரணத்தால் குடும்பங்களாக அமா்ந்து ஆடைகளை நெசவு செய்வோரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா்.

மூன்று வகையான கோரிக்கைகள்: ஜவுளி மற்றும் கைத்தறித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, நெசவாளா்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கி வருகிறது. எனவே, மூன்று முக்கிய நடவடிக்கைகள் மூலமாக நூல் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஞ்சு மற்றும் நூல் இருப்புகள் குறித்த விவரங்களை அனைத்து நூற்பாலைகளும் வெளியிடுவதை கட்டாயமாக்கினால், பஞ்சு மற்றும் நூல் குறித்த உண்மையான இருப்பு நிலவரத்தை வியாபாரிகள் அறிய முடியும்.

பஞ்சுக்கான இறக்குமதி வரி விலக்கு சலுகையானது செப்டம்பா் 30-ஆம் தேதி நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு இந்தியத் துறைமுகங்களுக்கு சரக்குகள் வர மூன்று மாதங்களுக்கு மேலாகும்.

எனவே, இறக்குமதி வரி விலக்குச் சலுகை ஜூன் 30-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். எனவே, செப்டம்பா் 30-ஆம் தேதி வரையுள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் இறக்குமதி வரி விலக்கு கிடைக்கும் என்று மத்திய அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும்.

நூற்பாலைகளுக்கு பருத்தி வாங்குவதற்கான ரொக்கக் கடன் வரம்பை மூன்று மாதங்களுக்கு மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு பருத்தி கொள்முதல் செய்வதற்கான நூற்பாலைகளின் ரொக்கக் கடன் வரம்பை ஓராண்டில், எட்டு மாதங்கள் வரை நீட்டிக்கலாம்.

இதேபோன்று, வங்கிகள் வாங்கும் மதிப்பில் 25 சதவீதமாக உள்ள விளிம்புத் தொகை 10 சதவீதமாகக் குறைக்கலாம். ஏனெனில் வங்கிகள் வாங்கும் பங்கு மதிப்பை சந்தையில் உண்மையான கொள்முதல் அல்லது சந்தை விகிதங்களை விட குறைவான விலையில் கணக்கிடுகின்றன.

ஜவுளித் துறையில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com