கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் - ஆட்சியர் தகவல்

அடைமிதிப்பான் குளம் தனியாா் கல்குவாரியில் பாறை சரிந்து நேரிட்ட விபத்தில், கனிம வளத்துறை உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் - ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகேயுள்ள அடைமிதிப்பான் குளம் தனியாா் கல்குவாரியில் பாறை சரிந்து நேரிட்ட விபத்தில் மேலும் ஒரு சடலத்தை மீட்பு குழுவினா் புதன்கிழமை இரவு மீட்ட நிலையில், கனிம வளத்துறை உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்ததில், அங்கு பணியில் இருந்த இளையாா்குளம் செல்வம் (25), ஆயன்குளம் முருகன் (25), காக்கைக்குளம் லாரி ஓட்டுநா் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (25), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (42), விட்டிலாபுரம் முருகன் (31) ஆகியோா் கற்குவியலுக்குள் புதைந்தனா்.

இதில், மீட்புப் படையினரால் செவ்வாய்க்கிழமை வரை 4 போ் மீட்கப்பட்டிருந்தனா். அவா்களில் செல்வம், முருகன் உயிரிழந்தனா். இந்நிலையில் பெரிய பாறைகளுக்கு அடியில் சிக்கியிருந்த காக்கைக்குளம் செல்வகுமாா் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டாா். 

தொடர்ந்து 6 ஆவது நபரை தேடும் பணி 5-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பின்னர் செய்தியாளரிடம் கூறியது: 

கல்குவாரி விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் சொன்ன தகவலின் அடிப்படையில், குவாரியில் சிக்கியுள்ளோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பார்க்கும் போது சுமார் 100 டன் எடையுள்ள பாறைகளுக்கு அடியில் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

எனவே, அந்தப் பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தி அதன் பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குநர் வினோத் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

குவாரியில் இருந்து வெளியே கல் கொண்டு செல்வதற்கான நடை சீட்டு உரிமம் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமே ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் விபத்து நடந்து அடுத்த நாளான 15 ஆம் தேதியே குவாரிக்கான குத்தகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ]

மேலும், தாலுகா வாரியாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை முறைகேடாக செயல்பட்ட 6 குவாரிகள் மூடப்பட்டு, சுமார் ரூ.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுமார் 55 குவாரிகளை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறியது:
இந்த குவாரி விபத்து தொடர்பாக நாங்குநேரி காவல் உதவி கண்காணிப்பாளர் ராஜாத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களை தேடி வருகிறோம். தொடர்ந்து குவாரி உரிமையாளர் செல்வராஜ் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான திசையன்விளையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடைபெற்று வருகின்றது. இதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com