பொழிச்சலூரில் பயங்கரம்: காவல் ஆணையர் ரவி அளித்த திடுக்கிடும் தகவல்

பொழிச்சலூரில், 41 வயதாகும் பிரகாஷ் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையை அடுத்த பொழிச்சலூரில், 41 வயதாகும் பிரகாஷ் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆயுர்வேத மருந்துக் கடை நடத்தி வந்த பிரகாஷ், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதுவே, இந்த நிலைக்கு அவரைத் தள்ளக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்றும் அவரை நன்கு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

பிரகாஷ், நேற்று தனது திருமண நாளன்று, மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு, தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இன்று காலை அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாததாலும், அவரது உறவினர்கள் செல்லிடப்பேசியில் அழைத்தபோது யாரும் எடுக்காததாலும் சந்தேகமடைந்து காவல்துறையினருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்த காவலர்கள், வீட்டைத் திறந்து பார்த்த போது பிரகாஷின் மனைவி காயத்ரி (35), மகன் ஹரிகிருஷ்ணன் (11), மகள் நித்யஸ்ரீ (9) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பிரகாஷும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ஷங்கர்நகர் காவல்துறையினர் இது குறித்து வழக்கு விசாரணை நடத்தி, உடல்களைக் கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்டமாக நடந்த விசாரணையில், பிரகாஷ், தனது குடும்பத்தினருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு, அவர்கள் மயங்கியதும், மின் ரம்பத்தால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு பிறகு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கொலைக்குப் பயன்படுத்திய மின் ரம்பத்தை கடந்த 19ஆம் தேதிதான் பிரகாஷ் ஆன்லைனில் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் சம்பவம் நடந்த வீட்டில் காவல்துறை ஆணையர் ரவி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, வீடு முழுக்க ரத்த வெள்ளமாகக் காணப்படுகிறது. பிள்ளைகளைக் கூட மின் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

வீட்டில் சோதனை நடத்தியபோது பிரகாஷ் ரூ.3.50 லட்சத்துக்கு கடன் வாங்கியதற்கான பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, தனது குடும்பத்தையே கொன்று, தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படக் காரணம் கடன் பிரச்னையா? கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், வீடு முழுக்க தோய்ந்திருக்கும் ரத்த வெள்ளத்தில் ஒருவரின் கால் அடையாளம் பதிவாகியிருக்கிறது. அந்த ஆள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com