திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பேரா. நெடுஞ்செழியன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திருச்சி மாவட்டம், அன்பில் அருகேயுள்ள படுகை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 

News image
Updated On :4 நவம்பர் 2022, 10:07 am

DIN

திருச்சி மாவட்டம், அன்பில் அருகேயுள்ள படுகை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 

தமிழ்ப் பேராசிரியரான இவர், 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற இவரது ஆய்வு நூலானது கூடுதல் பதிப்புகளைக் கண்டுள்ளது. கருணாநிதியின் செம்மொழி விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றவர். 

இந்நிலையில் இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் - முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அவருக்குக் 'மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை' நான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அவர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

அப்போது உரையாற்றிய நான், ''2021-ஆம் ஆண்டுக்கான மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறும் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் அறிவுத் திறத்தைச் சொல்வதாக இருந்தால் பல மணி நேரம் ஆகும். கருணாநிதி - பேராசிரியர் அன்பழகன் இன்று இருந்திருந்தால் முனைவர் க.நெடுஞ்செழியன் விருது வழங்கும் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

தமிழுக்கும் தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன். பல்வேறு நூல்களைப் படைத்தவர். தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வருபவர் பேராசிரியர். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது" என்று குறிப்பிட்டேன். அத்தகைய படைப்பாளியாகவும் போராளியாகவும் இருந்தவரைத்தான் இழந்துள்ளோம்.

Story image
Story image

இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், தமிழ் இலக்கியத்தில் உலகாயதம், உலகத்தோற்றமும் தமிழர் கோட்பாடும், தமிழர் தருக்கவியல், தமிழரின் அடையாளங்கள், சங்க காலத் தமிழர் சமயம், சமூகநீதி, இந்திய சமூகப் புரட்சியில்  திராவிட இயக்கத்தின் கொடை, பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமாரன் ஆசானும்,  பக்தி இயக்கங்களும் வைதீக எதிர்ப்பும் ஆகிய அவரது நூல்கள் தமிழுக்கு மிகப்பெரிய கொடையாகும். 'ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' என்ற அவரது நூலை 'அன்பகத்தில்' வெளியிட்டு உரையாற்றும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கினார்கள்.

அவர் உடல்நலிவுற்ற செய்தி அறிந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி நலம் பெற ஏற்பாடுகளைச் செய்தோம். அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அவரைச் சென்று பார்த்து நலம் அறிந்து வந்தார். நலம் பெற்றுத் திரும்பி தனது அறிவுலகச் செயல்களைத் தொடர்வார் என்று பெரிதும் நம்பினேன். ஆயினும், அவரது உடல் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் மறைந்து விட்டார்.

அவரது அறிவு நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட உதவவே செய்யும்.

'தமிழ் மரபும், பெருமையும் காத்திடும் தமிழ் மான மறவர்' என்று பேராசிரியர் அன்பழகனாரால் போற்றப்பட்ட பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் புகழ் வாழ்க!

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.