நான்கு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை: கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.
நான்கு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை: கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை நிலவரம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (07.11.2022) மாநில அவசரகால செயலாக்க மையத்தில் ஆய்வு நடத்தினார்.

நேற்று (6.11.2022) தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் 6.39 மி.மீ. மழை பெய்துள்ளது. 
இதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 24.98 மி.மீ. பெய்துள்ளது. 
வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 6.11.2022 அன்று மனித உயிரிழப்பு பதிவாகவில்லை. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4.00 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 6.11.2022 அன்று
23 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது.
45 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி
6.11.2022 முடிய பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 71 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 29.10.2022 முதல் 05.11.2022 முடிய மொத்தம் 2,83,961 உணவு பொட்டலங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 833 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.
7-11-2022 மற்றும் 8-11-2022 ஆகிய நாட்களில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9-11-2022 அன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 4.11.2022 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-11-2022 அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 02.11.2022 அன்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

முதல்வரின் அறிவுரைகளின் படி வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விபரம்

இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.61 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 19 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
713 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.73 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 165 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 292 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com