விரைவில் பாடி - திருநின்றவூர் சாலை விரிவாக்கம்: திருப்பதி வரை விரிகிறது

பாடி - திருநின்றவூர் வரையிலான 22 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
விரைவில் பாடி - திருநின்றவூர் சாலை விரிவாக்கம்: திருப்பதி வரை விரிகிறது

சென்னை: பாடி - திருநின்றவூர் வரையிலான 22 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியின் ஒரு பகுதியாக பாடி - திருநின்றவூர் வரையிலான 22 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான நிலத்தை கையகப்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளுக்காக மாநில நெடுஞ்சாலைத் துறை அண்மையில் ரூ.152 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும், திருநின்றவூர் - திருவள்ளூர் இடையேயான சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிக்காக ரூ.340 கோடியை ஒதுக்கீடு செய்து, பணிகளையும் தொடங்கியிருக்கிறது.

திருத்தணி - திருப்பதி இடையே வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக, 2007ஆம் ஆண்டு, சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா இடையேயான மாநில நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்ற மாநில அரசு முன்மொழிந்திருந்தது.

அப்போது, தேசிய நெடுஞ்சாலைத் துறை, அலமேலுரங்காபுரம் - திருநின்றவூர் இடையேயான சாலையை விரிவாக்கம் செய்யும் பணியைத் தொடங்கி திருவள்ளூர் வரையிலான 58 கிலோ மீட்டர் சாலையை விரிவாக்கம் செய்தது. ஆனால் மீதமுள்ள 17 கிலோ மீட்டர் சாலை, நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால் நின்றுபோனது.

சாலை விரிவாக்கம் நின்றது ஏன்?

இதுபோலவே, பாடி - கொரட்டூர் சந்திப்பு - திருநின்றவூர் இடையேயான 22 கிலோ மீட்டர் தொலைவு சாலையை ஆறு வழித்தடமாக மாற்றும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறைத் தொடங்கியது. ஆனால் அதனை வெறும் நான்குவழிச் சாலையாக மட்டுமே விரிவாக்கம் செய்ய முடிந்தது. 

பாடி, மண்ணூர்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில், சாலையை விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த பல வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வழக்குகளைத் தொடர்ந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசுக்கு மாற்றுவதில் சில சிக்கல்கள் என பல்வேறு பிரச்னைகளால் இந்த திட்டம் 2010 - 11ஆம் ஆண்டில் கைவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுதோறு அதிகரித்துக் கொண்டே போனது.

மீண்டும் 2013ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி, ரூ.168 கோடி விடுவிக்கப்பட்டும், பல்வேறு பிரச்னைகளால் மீண்டும் முடங்கித்தான் போனது.

இதன் காரணமாக, அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் பாடி மேம்பாலம் வரை நான்கு வழிச்சாலையாக இருக்கும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலானது, அம்பத்தூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இரண்டு வழிச் சாலைகளில் மிக மோசமடைகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் வாகன ஓட்டிகள்.

இந்த நிலையில்தான், நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து, 152 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதகாவும், விரைவில் திட்டமிட்டப்படி சாலை விரிவாக்கம் பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்கள்.

இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் சவாலாக இருக்கப்போவது, அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் மேம்பாலத்தை ஆறுவழித் தடமாக மாற்ற வேண்டும் என்பதே. அப்பகுதியில் 6 வழித்தடம் கொண்ட மேம்பாலத்தை அமைக்க, அங்கிருக்கும் நிலங்களைக் கையகப்படுத்த மட்டும் ரூ.13 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வே அனுமதி கேட்டு பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பாடி - திருநின்றவூர் இடையே சாலை விரிவாக்கம் பணி தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும். திருநின்றவூர் வரை சாலை விரிவாக்கம் முடிந்துவிட்டால், திருவள்ளூர் வரை செல்லும் வாகனங்கள் நெரிசல் இன்றிச் செல்ல முடியும்.

சென்னை - திருப்பதி இடையே பல இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை தொடங்கியிருப்பதாகவும், பல இடங்களில் நான்கு வழிச் சாலைகள் இன்னும் 18 மாதங்களில் உருவாகிவிடும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதனால் சென்னை - திருப்பதி இடையே சாலைகள் விரிகின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகளாக மாறவிருக்கின்றன என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com