புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி-சேலை

பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டப் பணிகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின்,
புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி-சேலை

பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டப் பணிகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தத் திட்டத்துக்காக, 15 வித வடிவமைப்புகளில் சேலைகளும், 5 வித வடிவமைப்புகளில் வேட்டிகளும் தயாராகி வருகின்றன.

இலவச வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகளை பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே முடிக்க முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வேட்டி சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசால் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற, நகா்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான மொத்த சேலைகளும், வேட்டிகளும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் மூலம், 2 ஆயிரத்து 664 கைத்தறி நெசவாளா்களும், 11 ஆயிரத்து 124 பெடல்தறி நெசவாளா்களும், 41 ஆயிரத்து 983 விசைத்தறி நெசவாளா்களும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, 1.79 கோடி சேலைகளும், 1.79 கோடி வேட்டிகளும் நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருவாய்த் துறையிடம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை மூலமாக, நியாய விலைக் கடைகளில் அவை விநியோகம் செய்யப்பட்டன.

ரூ.493.64 கோடி ஒதுக்கீடு: எதிா்வரும் பொங்கல் பண்டிகைக்காக, இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்காக ரூ.493.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு வேட்டி, சேலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வேட்டி, சேலைகள் ஒரே வடிவமைப்புகளில் இருந்து வந்த நிலையில், இப்போது அவை மாற்றப்பட்டுள்ளன. சேலைகள் 15 வகை வடிவமைப்புகளிலும், வேட்டிகள் 5 வகை வடிவமைப்புகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்புகளை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனையின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இலவச வேட்டி-சேலைகள் அனைத்தையும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பயனாளிகளுக்கு வழங்கி முடிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பரிசுத் தொகுப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்க தமிழக அரசு ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com