திருவள்ளூர் ராகவேந்திரர் கோயிலில் பஞ்சலோக சிலை, நகை, பணம் திருட்டு!

திருவள்ளூரில் பழமையான ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து பஞ்சலோக சிலைகள், வெள்ளி, நகை, ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன. 
திருட்டு நடைபெற்ற ராகவேந்திரர் கோயிலில் சிதறிக் கிடக்கும் பொருள்கள்.
திருட்டு நடைபெற்ற ராகவேந்திரர் கோயிலில் சிதறிக் கிடக்கும் பொருள்கள்.

திருவள்ளூர்: திருவள்ளூரில் பழமையான ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து பஞ்சலோக சிலைகள், வெள்ளி, நகை, ரொக்கம் ஆகியவைகளுடன் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கும் கருவியையும் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான வீரராகவர் கோயில் குளம் அருகே தெற்கு குளக்கரை தெருவில் அமைந்துள்ளது ராகவேந்திரர் கோயில் உள்ளது. இந்த பழமையான கோயில் கடந்த 2001-இல் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ராகவேந்திரருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜையும் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து இரவில் வழக்கம்போல் அர்ச்சகர் ராகவேந்திரன் ,கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அர்ச்சகர் ராகவேந்திரன் வெள்ளிக்கிழமை காலையில் கோயிலுக்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு பொருள்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கையில் வெள்ளிக் கவசம், வெள்ளி கோமுக தட்டு, கலச சொம்பு, பஞ்சபாத்திரம், வெள்ளி ஆரத்தி தட்டு, வெள்ளி நாணயம், அகல், தீபம், உள்பட 18 கிலோ வெள்ளிப் பொருள்கள், 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை, 63 கிராம் நகை மற்றும் ரொக்கம் ரூ.30 ஆயிரம் ஆகியவைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும், கோயிலில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்த கருவியையும் உடைத்து எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் ராகவேந்திரன், திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் ஊருக்கு மையப்பகுதியில் உள்ள கோயிலில் வெள்ளி, நகை, சிலை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com