கோவை காா் சிலிண்டா் வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவையில் நிகழ்ந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை காா் சிலிண்டா் வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு


புது தில்லி: கோவையில் நிகழ்ந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோவையில் நிகழ்ந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று பரிந்துரைத்திருந்த நிலையில், மத்திய அரசு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ஆம் தேதி, காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கோவை சம்பவம் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்,  கோவையில் நடந்த காா் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக, காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

என்ஐஏ விசாரணை: வழக்கு விசாரணையின் இப்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யவும் காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டிருந்தார்.

இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடா்புகளும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com