முத்துராமலிங்கத்தேவரின் நினைவைப் போற்றுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்: சீமான்

முத்துராமலிங்கத்தேவரின் நினைவைப் போற்றுவதில் தாங்கள் பெருமை அடைகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்கத்தேவரின் நினைவைப் போற்றுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்: சீமான்

முத்துராமலிங்கத்தேவரின் நினைவைப் போற்றுவதில் தாங்கள் பெருமை அடைகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்கத்தேவரின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர் செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ் பேரினத்தின் பெருமைமிகு அடையாளமாக இருக்கிற எங்களுடைய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவைப் போற்றுகிற நாள் இன்று. உண்மையைப் பேசு, அதை உரக்கப் பேசு, உறுதியாகப் பேசு, அதை இறுதிவரை பேசு என்று எங்களைப் போன்ற இளைய தலைமுறை பிள்ளைகளுக்குக் கற்பித்தப் பெருந்தகை. எதிர்காலத்தில், பாலை விற்பது போல தண்ணீரையும் போத்தலில் அடைத்து விற்பார்கள், மக்கள் விளைநிலங்களைக் கூறுபோட்டு வீட்டு மனைகளாக்கி விற்பார்கள், புறாக்கள் கூடுகட்டி வாழ்வது போல மக்கள் வீடு கட்டி வாழ்வார்கள் என்று முன்பே கணித்துக் கூறிய கால ஞானி எங்கள் பெருமைக்குரிய தாத்தா முத்துராமலிங்கத்தேவர். அவருடைய நினைவைப் போற்றுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். 

தமிழக முதல்வர் கேரளத்தில் சென்று மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார், ஆனால், இங்கு ஆளுநரை வைத்துக்கொண்டு பாஜக இரட்டை ஆட்சி நடத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறார். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய காவல் படை, சிபிசிஐடி, கியூ பிராஞ்ச் என எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எதற்கு கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க வேண்டும்? அது மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பது என்றாகிவிடாதா? கல்வி, மருத்துவப் படிப்பு, மின் உற்பத்தி என்று எல்லாவற்றையும் மாநில உரிமைகளில் இருந்து பறிகொடுத்துவிட்டார்கள். இப்போது எது ஒன்றும் மாநில அரசிடம் இல்லை. பிறகு முதல்வர் மாநில சுயாட்சி என்று பேச என்ன இருக்கிறது?” என்று கூறினார். மேற்கொண்டு, “இங்கு வலுக்கட்டாயமாக ஒரே நாடு, ஒரே மொழி என்று திணிக்க நினைக்கிறார்கள். அதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நாடு, பல மொழிகளைப் பேசக்கூடிய தேசிய இன மக்கள் வாழக்கூடிய ஒரு ஐக்கியம் தான். அதைப் புரிந்து கொள்ளாது ஆட்சியாளர்கள் இவ்வாறு செய்து கொண்டிருப்பது பெரும் ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும். 

இதனால் நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டி, நாட்டைக் கூறுபோட நினைப்பது இவர்கள் தானே தவிர வேறுயாரும் அல்லர். இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் அவர், “அரவிந்த் கேஜரிவால் ஒரு அறிவார்ந்த தலைவர் என்று நினைத்தேன். ஆனால், ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்குப் பதிலாக இலட்சுமி படத்தைப் போட வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை நான் ஏற்கவில்லை. முதலில் ரூபாய் நோட்டில் அண்ணல் காந்தி படம் இருப்பதே வருத்தமாகத் தான் இருக்கிறது. அதற்கு காரணம், ஊழல் இலஞ்சத்திற்கு எதிராக இருந்த காந்தியின் படம் போட்ட ரூபாய் நோட்டு தான் இலஞ்சமாக கொடுக்கப்படுகிறது. மதுவிற்கு எதிராக இருந்த காந்தி சிரித்துக்கொண்டிருக்கும் படம் போட்ட நோட்டு தான் மது வாங்குவதற்கும் கொடுக்கப்படுகிறது. விபச்சார விடுதிகளில் அதே காந்தியின் படம் போட்ட ரூபாய் நோட்டு தான் கொடுக்கப்படுகிறது. 

கொலை செய்பவனுக்கும் காந்தி முகம் பதித்த ரூபாய் நோட்டு தான் கொடுக்கப்படுகிறது. அந்த ரூபாய் நோட்டில் நீங்கள் சாமியாக வணங்குகிற லட்சுமி படம் போட்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். கொலை செய்பவனிடம், மது விற்பனையாளரிடம், ஊழல் செய்பவனிடமும், லஞ்சம் வாங்குபவனிடமும் இலட்சுமி தெய்வம் துணை செல்ல விடுவதா? இந்த சிந்தனையே பெரும் மடமை” என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com