மயிலாடுதுறை தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு: ஆதீனகர்த்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை பழைமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் பக்தர்கள் நிதியுதவியுடன் புதிதாக கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. 
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் அருகில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற குடமுழுக்கு விழா.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் அருகில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற குடமுழுக்கு விழா.


மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் அருகில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தருமபுரம், சூரியனார்கோவில், வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

சப்தகாசி ஸ்தலம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறையில், துலாக்கட்டம் விஸ்வநாதர், திருவிழந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பெரிய கோயில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய 7 விஸ்வநாதர் கோயில்கள் உள்ளன. இதில், அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. 

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலை இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதியுதவியுடன் புதிதாக கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. 

விழாவில், தருமபுரம், சூரியனார்கோவில், வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
 

இதையொட்டி கடந்த திங்கள்கிழமை காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு கடங்களில் நிரப்பப்பட்டது. தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நான்குகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜையின் நிறைவில், மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றிவந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

அங்கு வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார், நகராட்சி தலைவர் என்.செல்வராஜ், சென்னை மகாலெட்சுமி டிரஸ்ட் நிறுவனர் மகாலெட்சுமி சுப்பிரமணியம், அதிமுக மாவட்ட முன்னாள் செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், சைவவேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணை டி.சொக்கலிங்கம், தருமபுரம் ஆதீனக் கல்லூரிச் செயலர் இரா.செல்வநாயகம், தருமபுரம் தேவாரப்பாடசாலை நிறுவனர் குரு.சம்பத்குமார், வர்த்தக சங்க பிரமுகர்கள் எஸ்.வி.பாண்டுரெங்கன், சிவலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com