சாலைக்கு நடுவே மின்கம்பம்: வேலூரைப் போல நெல்லையில் ஒரு சம்பவம்

சாலை விரிவாக்கப் பணியின்போது வேலூரில் அடிபம்பை அகற்றாமல் சாலை அமைத்திருந்தது போல நெல்லையிலும் ஒரு அலட்சிய சம்பவம் நடந்துள்ளது. 
சாலைக்கு நடுவே மின்கம்பம்: வேலூரைப் போல நெல்லையில் ஒரு சம்பவம்
சாலைக்கு நடுவே மின்கம்பம்: வேலூரைப் போல நெல்லையில் ஒரு சம்பவம்

சாலை விரிவாக்கப் பணியின்போது வேலூரில் அடிபம்பை அகற்றாமல் சாலை அமைத்திருந்தது போல நெல்லையிலும் ஒரு அலட்சிய சம்பவம் நடந்துள்ளது. 

முதல்வர் வருகைக்காக அவசர கதியில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே திருச்செந்தூர் பிரதான சாலையில் நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் புதிதாக  தார் சாலை போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 8ம் தேதி நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்தகொள்ள வருகை தருகிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த மாநகர சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் செப்பனிட்டு அவசர அவசரமாக புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் வருகைக்கான நாள்கள் குறைவாக இருப்பதால் சாலைகள் செப்பனிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை முறையாக அகற்றாமல் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள இந்த பிரதான சாலையில் எந்நேரமும் விபத்து ஏற்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

சாலை நடுவே உள்ள மின் கம்பத்தைச் சுற்றிலும் தார் கற்களை போட்டு மூடியுள்ளதால் சாலையில் ஒரு பகுதியாக மின்கம்பம் இருப்பது போல் காட்சியளிக்கிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்லும். அந்த நேரத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடந்ததை அறியாமல் வரக்கூடிய வெளியூர் வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களும் மின்கம்பத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

உடனடியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி சாலையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் வருகையினால்தான் இந்த சாலை தற்போது செப்பனிடப்படுகிறது. 

எனவே தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் அவ்வப்போது நெல்லை மாவட்டத்திற்கு வந்து சென்றால் நீண்ட நாள்களாக பராமரிப்பின்றி கிடக்கும் சாலைகள் மீண்டும் புதுமை அடையும். 

அது மக்களுக்கும் போக்குவரத்திற்கான சிறந்த வசதியை ஏற்படுத்தும்.  எனவே இதற்காகவும் தமிழக முதல்வருக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என அப்பகுதி மக்கள்  தெரிவித்தனர். 

முன்னதாக, வேலூரில் இதுபோன்று புதிய சாலை அமைக்கும் பணியின்போது சாலை நடுவே இருந்த அடிபம்பை அகற்றாமல் சாலை அமைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்கதையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com