தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் பசுமைச் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், வழிநெடுங்கிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று 11.30 மணியளவில் அதிமுக அலுவலகம் வந்தடைந்தார்.
இதையும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து
தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலும், அதிமுக அலுவலக கலவரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில் இபிஎஸ்ஸை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று இன்று காலை ஓபிஎஸ் தரப்பில் டிஜிபியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.