
நீடாமங்கலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனை அவமதித்த பாஜக பிரமுகரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலத்தில் புதன்கிழமை மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனைக் கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் முத்தரசன் உருவப்படத்தை செருப்பால் அடித்து கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனைப் பார்த்த போலீசார் தடுத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீடாமங்கலம் காவல்நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் புகார் அளித்தார்.
அதேநேரத்தில், உடனிருந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். புகாரைப் பெற்ற மன்னார்குடி டி.எஸ்.பி. பாலச்சந்திரன் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்குப் பதிவு செய்து பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷை இன்று அதிகாலை கைது செய்து நீடாமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சீதாலெட்சுமி பாஜக நிர்வாகி சதீஷை வரும் 16-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். சதீஷ் மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.