நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மனப் பயிற்சியும் சேர்த்து அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மனப் பயிற்சியும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மனப் பயிற்சியும் சேர்த்து அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
Updated on
2 min read

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மனப் பயிற்சியும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். மாணவி லக்க்ஷனா ஸ்வேதா தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோல்வியடையததால் மனமுடைந்த அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 

ஜெயலலிதாவின் ஆட்சியிலும், அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற அதிமுக ஆட்சியிலும், நீட்டை ஒழிக்க சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டன. திமுக
ஆட்சி அமைந்த பின்னர் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஜெயலலிதா அரசால் உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் முறையாக
செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
``அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’’ என்று அவ்வை மூதாட்டி கூறினார். மாணவச் செல்வங்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த உன்னத வாழ்வை, நம்மை ஈன்ற பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, நமக்கு கிடைத்துள்ள அற்புதமான, உன்னதமான உயிரை, மாய்த்துக்கொள்ளும் செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது என்று மாணவச் செல்வங்களிடம்
அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கல்வி என்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கான திறவுகோல். குறிப்பிட்ட படிப்புதான் நம் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்ற எண்ணத்தை மாணவச் செல்வங்கள் கைவிட வேண்டும் என்று, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வாஞ்சையோடு வேண்டுகோள் விடுக்கிறேன். விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, படித்து பட்டம் பெற்று முன்னேறுவோம் என்ற வைராக்கியத்தை மாணவச் செல்வங்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இனியும் இந்த திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை. ``ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்’’ என்று வாய்ச் சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு, மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதற்கும், அவர்களை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்களின் துயரத்திற்கும் இந்த திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

இனியாவது, நீட் தேர்வை ரத்தும் செய்யும் வரை மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கிய இலவச பயிற்சி மையங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஒன்றியங்கள் தோறும் பயிற்சி மையங்களை தொடங்கிவைத்து, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப் பயிற்சியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com