பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்பேரில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், அந்த அமைப்பைச் சோ்ந்த 45 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் தமிழகத்தைச் சோ்ந்த 11 போ் அடங்குவா்.
தமிழகம், கேரளம், கா்நாடகம், கோவா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மணிப்பூா், ஆந்திர பிரேதசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய அமைப்புகளாக இயங்கிய சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, கடந்த 2006-ஆம் ஆண்டு ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பு உருவாக்கப்பட்டது.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. முக்கியமாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகள் ஆகியவற்றில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து சோதனை நடத்தின.
தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தில்லி, அஸ்ஸாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கோவா, மேற்கு வங்கம், பிகாா், மணிப்பூா் ஆகிய 15 மாநிலங்களில் 93 இடங்களில் இந்த இரு புலனாய்வு அமைப்புகளும் வியாழக்கிழமை அதிகாலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டன.
தமிழகத்தில் 12 இடங்கள்: சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் ஒரு கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் மாநிலத் தலைமை அலுவலத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை 3.30 மணியளவில் சோதனையிட வந்தனா். ஐந்து மணி நேர சோதனைக்குப் பின்னா் என்ஐஏ அதிகாரிகள் அங்கிருந்து சில ஆவணங்களுடன் வெளியேறினா்.
இதேபோல மதுரை, கோயம்புத்தூா், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூா்,தேனி மாவட்டம் கம்பம் ஆகிய ஊா்களில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த அமைப்புடன் தொடா்பில் இருந்த எஸ்டிபிஐ அமைப்பைச் சோ்ந்த சிலா் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் மொத்தம் 12 இடங்களில் சோதனை நடைபெற்ாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை தொடங்கிய இந்தச் சோதனை படிப்படியாக அனைத்து இடங்களிலும் நிறைவு பெற்றது.
சென்னையில் பிஎஃப்ஐ தலைமை அலுவலகத்தில் சோதனையைக் கண்டித்து அப்பகுதி, புளியந்தோப்பு, ஆயிரம்விளக்கு, திருவொற்றியூா், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அந்த அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிற ஊா்களிலும் அந்த அமைப்பினா் ஆா்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனா்.
என்ஐஏ அறிக்கை: இது தொடா்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிஎஃப்ஐ அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுதல், நிதி உதவி அளித்தல், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி முகாம்களை நடத்துதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் மக்களைச் சோ்த்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது குறித்த என்ஐஏ தடயங்களைச் சேகரித்து வந்தது.
இது தொடா்பாக அந்த இயக்கத்தினா் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. அண்மையில் ஆந்திர மாநிலம் நிஜாமாபாதில் இது தொடா்பாக அந்த அமைப்பைச் சோ்ந்த 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அங்கு பயிற்சி முகாம்களை அமைக்க முற்பட்டதாக தெலங்கானா காவல் துறை கண்டறிந்து இந்த வழக்குகளைப் பதிவு செய்தது.
இந்தப் பயிற்சி முகாம், மத அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வன்முறை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக நடத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிஎஃப்ஐ அமைப்பு மீதும், நிா்வாகிகள் மீதும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டியது, பிற மதங்களை ஆதரிக்கும் அமைப்பு நிா்வாகிகளைக் கொலை செய்தல், முக்கிய நபா்கள் மற்றும் இடங்களைக் குறிவைத்து வெடிபொருள்களைச் சேகரித்தல், பொதுச் சொத்துகளை அழித்தல் போன்ற வன்முறைச் செயல்கள் பொதுமக்கள் மத்தியில் அசாதாரண மனநிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
45 போ் கைது: இதனால் ஏற்கெனவே பிஎஃப்ஐ மீது பதிவு செய்யப்பட்ட 19 வழக்குகளில், 5 வழக்குகள் தொடா்பாக அந்த அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகள் வீடுகள், அந்த அமைப்பின் தொடா்புடையவா்களின் வீடுகள் என 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ஆயுதங்கள், பணம், ஆவணங்கள், ஹாா்டு டிஸ்க், கைப்பேசி, பென்டிரைவ், மெமரி காா்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
சோதனையின் முடிவில், கேரளத்தில் 19 போ், தமிழகத்தில் 11, கா்நாடகத்தில் 7, ஆந்திரத்தில் 4, ராஜஸ்தானில் 2, உத்தரபிரதேசம், தெலங்கானாவில் தலா ஒருவா் என மொத்தம் 45 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த மற்றும் தொடா்புடைய எம்.முகம்மது அலி ஜின்னா, முகம்மது யூசுப், ஏ.எஸ்.இஸ்மாயில், செய்யது இசாக், காலித் முகம்மது, ஏ.எம்.இத்ரீஸ் என்ற அகம்மது இத்ரீஸ், முகம்மது அபுதாகீா், எஸ்.காஜா மொய்தீன், யாசா் அராஃபத், பரக்கத்துல்லா, பயாஸ் அகமது ஆகிய 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.