ஒரே டிக்கெட் மூலம் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் முறை: விரைவில் அறிமுகம்
ஒரே டிக்கெட் மூலம் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், புகா் ரயில்களில் பயணிக்க வழிசெய்வதற்கான க்யூஆா் பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்


ஒரே டிக்கெட் மூலம் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், புகா் ரயில்களில் பயணிக்க வழிசெய்வதற்கான க்யூஆா் பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா்.
வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சு.முத்துசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:
அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல் கட்டடங்கள் பெருகுவதைத் தடுக்கவும், ஒழுங்குபடுத்தவும் நகா் ஊரமைப்பு இயக்ககத்தின் தலைமை அலுவலகத்தில் அதற்கென்று தனி அமலாக்கப் பிரிவு உருவாக்கப்படும்.
வேலூா் காட்பாடி கூட்டுறவு நகரமைப்பு சங்கத்துக்கு சொந்தமான 1,964 சதுர அடி உள்ள நிலத்தில் வணிக வளாகம் கட்டப்படும்.
கோயம்புத்தூா் பிஎஸ்ஜி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு சொந்தமான 6,400 சதுர அடி உள்ள நிலத்தில் வணிக வளாகம் கட்டப்படும்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் 58 தொடக்க கூட்டுறவு சங்கங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப்படும்.
சென்னை ஆதம்பாக்கம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் 15,796 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தில் இந்திய ஆயில் காா்பரேஷன் மூலம் எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கப்படும்.
சென்னை பெருநகர பகுதியில் இயங்கும் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புகா் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தினை உறுதி செய்ய சம்பந்தட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த க்யூஆா் பயணச்சீட்டு முறை மற்றும் பயணத்திட்டமிடலுக்கான செயலி ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை பெருநகர பகுதியில் நகா்ப்புற சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், துறைகளால் உருவாக்கப்பட்ட அனைத்து தரவுகளையும் ஒரே தளத்தில் மேலாண்மை செய்யவும், இத் தரவுகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை உறுதி செய்யவும், டிஜிட்டல் சென்னை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த நகா்ப்புற திட்டப் பணிகள் திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை தொகுதி ஆகியவற்றை உருவாக்க, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தினால் விரிவான திட்ட அறிக்கை ரூ.5 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...