குழந்தைகள் பால் அதிகம் அருந்துவதால் ரத்த சோகை ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுவதற்கு பால் அதிகம் உட்கொள்வதே காரணம் என்று உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 
குழந்தைகள் பால் அதிகம் அருந்துவதால் ரத்த சோகை ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
Published on
Updated on
2 min read

குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுவதற்கு பால் அதிகம் உட்கொள்வதே காரணம் என்று உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

உலகம் முழுவதும் மனிதனுக்கு ஏற்படும் உடலியல் சார்ந்த பிரச்னைகள் தற்போது அதிகாரித்து வருகின்றன என்று கூறலாம். அந்தவகையில் ஊட்டச்சத்துமின்மையால் ரத்த சோகையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின் அளவு இயல்பை விடக் குறைவாக இருத்தலே ரத்தசோகை எனப்படுகிறது. இது ஆண்களுக்கு 13.8 -17.2 கிராம்/டெசிலிட்டர்(g/dL) பெண்களுக்கு 12.1- 15.1 கிராம்/டெசிலிட்டர்(g/dL) இருக்க வேண்டும். 

ஹீமோகுளோபின் இந்த அளவைவிடக் குறைவாக இருந்தால் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் திறன் குறைகிறது. இதன் காரணமாக சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. 

ரத்த சோகைகளில் பல வகைகள் இருக்கும் நிலையில் மிகவும் பொதுவானதாக இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. இளம் வயதினர், இளம் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள், கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

சைவ உணவு உண்பவர்களுக்கு, குறிப்பாக பால் அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதாக நிபுணர்கள் ஓர் அதிர்ச்சித் தகவலைக் கூறுகின்றனர். 

தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஆர்.செல்வன், இறைச்சியில்தான் அதிக இரும்புச் சத்து இருப்பதாகவும், ஒரு சில சைவ உணவுகளில் மட்டுமே இரும்புச்சத்து உள்ளதாகவும் கூறுகிறார்.

இதுகுறித்து அவர், 'ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்பட பால் அதிகமாக உட்கொள்வதே காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சைவ உணவுகளைச் சாப்பிடுபவர்கள், தங்கள் உணவில் இரும்புச்சத்தை எடுத்துக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். பச்சை இலைக் காய்கறிகள், தினை வகைகள், பாலிஷ் செய்யப்படாத அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்டவை இரும்புச்சத்து மிக்க உணவுகள். 

இரும்புச்சத்து தவிர வைட்டமின் ஏ, பி12 மற்றும் ஃபோலேட் குறைபாடுகளினாலும் மரபுவழி காரணமாகவும் ரத்த சோகை ஏற்படலாம். இது அரிவாள் செல் ரத்த சோகை, தலசீமியா(மரபணு மூலமாக ஏற்படும் ரத்த சோகை), ஃபேன்கோனி அனீமியா(எலும்பு மஜ்ஜையில் ஏற்படுவது), பிளாக் - ஃபேன் அனீமியா(ரத்த சிவப்பணு செல்களின் எண்ணிக்கை குறைவது) ஆகியவற்றை ஏற்படுத்தலாம். 'அனீமியா முக்த் பாரத்' அல்லது 'அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு' போன்ற திட்டங்கள் மூலமாக கடந்த பல ஆண்டுகளாக அரசு முயற்சிகள் எடுத்து வரும் நிலையிலும் பெரிதாக முன்னேற்றம் இல்லை' என்று கூறினார். 

2022 தேசிய மருத்துவ நூலக அறிக்கை, உலகில் நான்கில் ஒருவர் (27 சதவீதம்) ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வளரும் நாடுகளில் மட்டும் இது 89 சதவீதத்திற்கும் அதிகம் என்று கூறுகிறது. 

ரத்த சோகை அறிகுறிகள்

சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், வெளிர் அல்லது மஞ்சள் நிற தோல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மயக்கம் அல்லது தலைச்சுற்றல், நெஞ்சு வலி, தலைவலி, கை, கால்கள் குளிர்ந்து இருத்தல் உள்ளிட்டவை ரத்த சோகையின் அறிகுறிகளாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com