சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் விடிய விடிய பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் விடிய விடிய பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு!

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் விடிய விடிய பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டு வருகின்றனர்.

சேலம்: ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் விடிய விடிய பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டு வருகின்றனர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித் திருவிழா என்பது ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கும். அந்த வகையில் கோட்டை மாரியம்மனுக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சேலத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் இருந்து பூக்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது.

தொடர்ந்து நாள்தோறும் இரவில் சிறப்பு அபிஷேகம் நடத்தி பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. விசேஷ ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிராா்த்தனை செலுத்துதல் தொடங்கியது.

இதனையொட்டி செவ்வாய்கிழமை மாலை முதலே ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதனால் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம் கோட்டை மாரியம்மன்

குடும்பத்துடன் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது

சேலம் மாநகர காவல்துறை சார்பில் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோயில் வளாகத்தைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடப்பதால் சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி பால்குட விழா, உற்சவா் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை, அன்னதானம் ஆகியவையுடன் ஆடித் திருவிழா நிறைவு பெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com