ஆடி கடைசி வெள்ளி: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு; 2,500 பக்தர்கள் பங்கேற்பு

அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சுமார்  2,500 பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. 
ஆடி கடைசி வெள்ளி: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு; 2,500 பக்தர்கள் பங்கேற்பு

காரைக்கால்: அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சுமார்  2,500 பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதிக்குட்பட்ட அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த கோலத்தில், வெண்ணிற ஆடை உடுத்தியவாறு, மூலவராக அருள்பாலிக்கும் அம்பாளை, தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

காரைக்காலின் எல்லைப் புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால், காரைக்கால் வரும் சுற்றுலாவினர் இக்கோயிலுக்கு சென்று தரிசித்து செல்வதாலும், சுற்றுவட்டார மக்களின் இஷ்ட தெய்வமாக பத்ரகாளியம்மன் திகழ்வதால் பிரசித்திப்பெற்று விளங்குகிறது.

ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷ மாதம் என்பதால், ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையும் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அம்பகரத்தூர் ஶ்ரீ பத்ரகாளியம்மன் 

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் (ஆகஸ்ட் 11) கோயில் வளாகத்தில் சுமார் 2,500 பக்தர்கள் திருவிளக்கு வழிபாட்டில் ஈடுபட்டனர்.   

ராகு காலத்தில் நடைபெறக்கூடிய பூஜை என்பதால் காலை 10.30 மணிக்குப் பின் வழிபாடு தொடங்கப்பட்டது. சிவாச்சாரியர்கள் மூலவருக்கு ஆராதனை நடத்திவிட்டு, உற்சவ அம்மனுக்கு ஆராதனை செய்யும் நிகழ்வை நடத்தினர். தொடர்ந்து கோயில் வளாகத்தின் முக்கிய இடங்களில் உள்ள விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.  பின்னர் பக்தர்கள் தாங்கள் கொண்டுவந்த விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். 

திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்ட வளாக அரங்கில் உற்சவ அம்மன்களான பத்ரகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டிருந்தனர். திருவிளக்கு வழிபாடு நிறைவில் மூலவர், உற்சவருக்கு  சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு, பக்தர்ளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.  ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com