சிஏஜி அறிக்கை மூலம் பாஜகவின் ஊழல் வெளிவந்துள்ளது: கே. பாலகிருஷ்ணன் பேட்டி

சிஏஜி அறிக்கை மூலம் பாஜகவின் ஊழல் வெளிவந்துள்ளது: கே. பாலகிருஷ்ணன் பேட்டி

சிஏஜி அறிக்கை மூலம் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக எத்தனை லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என்பது வெளிவந்துள்ளது
Published on


தஞ்சாவூர்: சிஏஜி அறிக்கை மூலம் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக எத்தனை லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என்பது வெளிவந்துள்ளது என்றும் அண்ணாமலை நடைபயணத்தால் தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை தெரிவித்தது:
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் மத்திய அரசின் சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஏழு ஊழல்கள் அம்பலப்பட்டுள்ளன. இந்த ஒரு அறிக்கையில் மட்டுமே பாஜக ரூ. 7.50 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பது வெளிவந்துள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு எத்தனை லட்சம் கோடி ஊழல் செய்திருக்கும் என்பது தெரிய வருகிறது. மேலும் இது ஊழல் ஆட்சி என்பதும் தெரிய வந்துள்ளது. 

இதற்கு பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை. இதற்கு காரணமான நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக மீது ஊழல் புகார் தெரிவித்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வது எந்த வகையில் நியாயம்.

இந்த ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. நிறைவு நாளான 7 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், காவிரி நீர் இல்லாததால் ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரையிலான ஏக்கரில் நெற்பயிர்கள் கருகிவிட்டன. இதனால் விவசாயிகள் மிகப் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளதால், ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்நிலையில் கர்நாடகம் தமிழகத்துக்கு தர வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை தர மறுப்பது எந்த வகையில் நியாயம். உச்ச நீதிமன்றத்துக்கு பயந்து தற்போது கர்நாடகம் 10 டி எம் சி தண்ணீர் மட்டும் தருவதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல.

இந்நிலையில் பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தண்ணீர் விடக்கூடாது எனக் கூறி போராட்டத்தை அறிவித்துள்ளார். அகில இந்திய கட்சியான பாஜக இப்படி ஒரு போராட்டத்தை அறிவிப்பது எந்த வகையில் நியாயம். இதன் மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிற, துரோகம் செய்கிற கட்சி பாஜக என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக ஏன் வாய் திறக்கவில்லை.

தமிழ்நாட்டில் நான்குநேரி, வேங்கைவயல், கோவில்பட்டி, அணைக்கரை என தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நிகழ்ந்து வருகிறது. இச்சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கப்படாததால், அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே தமிழக அரசும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழாது.

அண்ணாமலை நடைபயணத்தால் தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழகத்துக்கு விரோதமாக செயல்படும் பாஜக எது செய்தாலும் மாற்றம் இருக்காது என்றார் பாலகிருஷ்ணன்.

அப்போது மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com