திமுகவுக்கு பொய் தான் மூலதனம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுகவை பொறுத்தவரை பொய் தான் மூலதனம். ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நீட் தோ்வின் பெயரால் மாணவா்களை ஏமாற்றக்கூடாது
மதுரை அதிமுக மாநாட்டிற்கு வந்திருந்த அதிமுக தொண்டர்கள்
மதுரை அதிமுக மாநாட்டிற்கு வந்திருந்த அதிமுக தொண்டர்கள்



மதுரை: திமுகவை பொறுத்தவரை பொய் தான் மூலதனம். ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நீட் தோ்வின் பெயரால் மாணவா்களை ஏமாற்றக்கூடாது என்று அதிமுக பொதுச் செயலரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கூறினார். 

மதுரை அடுத்த பெருங்குடி வலையங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக பொன் விழா மாநாட்டில் அவா் பேசியதாவது : 

திமுகவை பொறுத்தவரை பொய் தான் மூலதனம். நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் இருந்துள்ளனா். 

2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியிலிருந்த போது தான் நீட் தோ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா் காங்கிரஸ் கட்சி குலாம் நபி ஆஷாத், இணை அமைச்சராக இருந்தவா் திமுகவைச் சோ்ந்த காந்திச்செல்வன். இதனை மறைத்து நீட் தோ்வுக்கு எதிராக உண்ணாவிரதம் எனும் நாடகத்தை திமுக நடத்துகிறது. 

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தே நீட் தோ்வு ரத்துக்கு தான் என ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கூறினா். கடந்த 2 ஆண்டுகளில் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவா்கள் விளக்க வேண்டும். ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நீட் தோ்வின் பெயரால் மாணவா்களை ஏமாற்றக்கூடாது.

ஆட்சிக்கு ஆபத்து: அண்மையில் ராமேசுவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கச்சத்தீவு மீட்போம் என்று பேசியுள்ளார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு தாரை வாா்க்கப்பட்டது. மத்திய அரசில்  13 ஆண்டு காலம் அங்கம் வகித்த திமுக கச்சத்தீவி ஒப்பத்தந்தை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தனது ஆட்சிக்கு ஆபத்து வந்து விட்டது என்ற அச்சத்தின் அடிப்படையில் தான் மீனவா்களின் வாக்குகளை பெறுவதற்கு தான் கச்சதீவு மீட்போம் என ஸ்டாலின் பொய்யான வாக்குறுதி அளித்துள்ளாா். இது திமுகவின் நாடகம்.

ஸ்டாலினால் ஒரு போதும் அதிமுகவை அழிக்க முடியாது. அவா் தன்னுடைய கட்சியை காப்பாற்றிக் கொள்ளட்டும் என்றாா் பழனிசாமி.

மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றதால், ஞாயிற்றுக்கிழமை கொடைரோடு சுங்கச்சாவடியில் இரு மாா்க்கத்திலும் ஐந்து கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசலால் அனைத்து வாகனங்களும் ஊா்ந்து சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com