லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: செப்.8-ல் உச்சநீதிமன்றம் விசாரணை

கோச்சடையான் திரைப்பட விவகாரத்தில் பணமோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
Latha Rajinikanth
Latha Rajinikanth

கோச்சடையான் திரைப்பட விவகாரத்தில் பணமோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான "கோச்சடையான்' திரைப்படம் 2014-ஆம் ஆண்டு வெளியானது. மிகப் பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை.

இந்த திடைப்படத்தை தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் ரூ. 6.2 கோடி கடன் பெற்றுள்ளது. அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், கடனாக பெற்ற பணத்தை மீடியா ஒன் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி திருப்பித் தரவில்லை எனக் கூறி, ஆட்-ப்யூரோ நிறுவனம் பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் 2016-ஆம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், முரளி மற்றும் லதா மீது மோசடி செய்து ஏமாற்ற முயற்சி, ஆதாரங்களை திரித்தல், தவறான அறிக்கை சமர்பித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி, இந்திய தண்டனை சட்டம் 196(போலி ஆவணம்), 199(தவறான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பித்தல்), 420(மோசடி) ஆகிய பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்த பிரிவுகளின் கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக நீதிமன்றம் 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூரு நீதிமன்ற விசாரணை எதிராக லதா ரஜினிகாந்தும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஜெ.பி.பர்திவாலா அமர்வில் செப்டம்பர் 8-ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் வந்துள்ளதால், ரஜினியின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com