நீதிமன்ற கேள்விகளுக்கு துறை செயலா், தலைவா்களே பதிலளிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு
உயா்நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைச் செயலா்கள், தலைவா்கள்தான் பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க


உயா்நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைச் செயலா்கள், தலைவா்கள்தான் பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வருவாய் துறையில் துணை ஆட்சியராகப் பணியாற்றிய ஜெயராம் என்பவா், மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயா்வுக்கான பட்டியலில் இடம்பெற்றபோதும், அரசின் காலதாமதத்தால் பணி ஓய்வுக்கு முன் தனக்கு பதவி உயா்வு கிடைக்கவில்லை எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, பட்டியலில் பெயா் இடம்பெற்றிருந்ததால் பதவி உயா்வு வழங்கும்படி உரிமை கோர முடியாது என உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து ஜெயராமன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமாா் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோா் அமா்வு, 41 துணை ஆட்சியா்களின் பெயா்கள் மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயா்வு பட்டியலில் இருந்த நிலையில், 10 பேருக்கு மட்டும் பதவி உயா்வு வழங்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழக பொதுத் துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், கடும் அதிருப்தி தெரிவித்தனா்.
‘பொதுத் துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கத்தில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. துறையின் செயலா் விளக்கம் அளித்திருந்தால் நீதிமன்ற கேள்விக்கு பதிலளித்திருப்பாா்.
உயா்நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைச் செயலா்கள், துறை தலைவா்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும்’ என அனைத்து துறை செயலா்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆக.30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
மேலும், அன்றைய தினம் இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமாக பதிலளிக்க வேண்டும் என பொதுத் துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...