
ஆலங்குளம்: ஆலங்குளம் பட்டாசு கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிரதான சாலையில் குழந்தைவேலு என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் புத்தக நிலையம் உள்ளது. இந்த கட்டடத்தின் மேல் தளத்தில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கடை உரிமையாளர் இரவு 10:30 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதையும் படிக்கலாம் | ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், சுமார் 12.30 மணி அளவில் மாடியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. வெடிச் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது பட்டாசுகள் வெடித்துச் சிதறி தீ பற்றி எரிந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதில், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம் அடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.