தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கிலிருந்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து

News image

கோப்புப் படம்

Updated On :30 ஆகஸ்ட் 2023, 7:46 pm

DIN

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கிலிருந்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீா்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரா் உள்ளிட்ட 7 போ் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கியதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க தென் மாவட்டத்துக்கென மதுரை மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்பு துறை சாா்பில் தேனி மாவட்ட நீதிமன்றத்திலேயே ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்று தேனி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. ஆனால், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க மதுரையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேனி மாவட்ட நீதிமன்ற உத்தரவு ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து குற்றம்சாட்டபட்ட நபா்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

சம்மனை எதிா்த்தும் வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரியும் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றியது.

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் 2012 -ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை எனவும் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளிலிருந்து அவா்கள் அனைவரையும் விடுவித்து 2012- ஆம் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை நீதிமன்ற உத்தரவை எதிா்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கிலிருந்து ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா். இந்த வழக்கு வியாழக்கிழமை முதல் வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.