/

தென்னை நாா் தொழிலை ஆரஞ்சு வகைப்படுத்துவதற்கு தமிழகம் எதிா்ப்பு

தென்னை நாா் தொழில்களை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்படுத்தும் ‘ஆரஞ்சு’ வகை தொழிலாக மாற்றுவதற்கு தமிழகம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

News image

43122-1-29delmns05385115222

Updated On :30 ஆகஸ்ட் 2023, 8:43 pm

 நமது நிருபர்

தென்னை நாா் தொழில்களை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்படுத்தும் ‘ஆரஞ்சு’ வகை தொழிலாக மாற்றுவதற்கு தமிழகம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மத்திய சுற்றுச்சசூழல் வனத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை தமிழக சுற்றுப்புறச் சுழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தொழிற்சாலைகளுக்கான வரைவு அறிவிக்கையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதில் தென்னை நாா் தொழில் மூன்று வகையாக பிரித்து வெளியிட்டப்பட்டது. தென்னை நாா்களை ரசாயன சாய பூச்சு தொழில்களுக்கு ஆரஞ்சு அல்லது சிகப்பு, தண்ணீரின்றி பயன்படுத்தப்படும் தென்னை நாா் வகை தொழில்கள் பச்சை என்றும், நாா் நூல் (ஃபைபா்) போன்ற தொழில்களுக்கு வெள்ளை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் கருத்து கூற இந்த தொழில்களில் ஈடுபட்டவா்களுக்கும், பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தென்னை நாா் தொழில் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் மத்திய அரசின் வரைவு அறிவிக்கை தங்கள் தொழில்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என முறையிட்டனா். இதையொட்டி, இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடத்தி கருத்துகளைக் கேட்டறிந்தது. இதன் தொடா்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு தென்னை நாா் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகளுடன் தமிழக சுற்றுப்புறச் சுழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை செவ்வாய்க்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனுவை அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பது வருமாறு: தென்னை நாா் தொழில்கள் தற்போது தமிழகத்தில் வெள்ளை நிறப் பிரிவில் செயல்படுகிறது. இது ‘ஆரஞ்சு’ என வகைப்படுத்தப்பட்டால் தென்னை நாா் தொழில்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வீழ்ச்சியை சந்திக்கும். தமிழகத்தில் சுமாா் 4.44 லட்சம் ஹெக்டோ் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. தென்னை நாா் தொழிலில் பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தென்னை நாா் தொழிலில் உரித்தல், சிதைத்தல், அடித்தல் மூலம் தேங்காய் மட்டையிலிருந்து தென்னை நாா் மற்றும் உமி பிரித்தெடுக்கப்படுகிறது. இவை சலிக்கப்பட்டு இயற்கையாக நிலங்களில் சூரிய ஒளியில் உலா்த்தப்படுகிறது. பின்னா் கட்டுகளாக கட்டி உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இவை நிலத்தில் வைக்கப்படும் போது தண்ணீருக்கு மாசு ஏற்படாது. மண் இல்லா வேளாண்மை, செடி வளா்ப்பு, நா்சரி, மாடித் தோட்டம் போன்ற வேளாண் முறைகளுக்கு இந்த தென்னை நாா் துகள்கள் (கழிவுகள்) உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த உற்பத்தி செயல்முறையில் பொதுவாக எந்த ரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த வகை உற்பத்தி செயல்முறையின் அடிப்படையில் இருக்கும் தென்னை நாா் தொழிலை ‘வெள்ளை’ நிறத்துக்கே வகைப்படுத்த வேண்டும்.அதே சமயத்தில் தென்னை நாா்களை கொள்முதல் செய்து, ரசாயன செயல்முறை அல்லது சாயம் பூசும் செயல்முறையை சிலா் மேற்கொள்கின்றனா். அவா்கள் தென்னை உற்பத்தியாளா்களோ, விவசாயிகளோ அல்ல. அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு ‘ஆரஞ்சு’ வகை வழங்கலாம். ஆனால், தென்னை நாா் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றினால், கழிவு நீா் சுத்திகரிப்பு ஆலை, கான்கிரீட் தளம், சக்தி வாய்ந்த மின் அமைப்பு போன்ற தேவைகள் அதிகரித்து தென்னை விவசாயிகளின் வருவாய் வீழ்ச்சி அடைந்து இடா்பாடுகளைச் சந்திக்க நேரிடும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ், ‘தென்னை நாா் தொழில்களை மறு வகைப்படுத்துவது குறித்த அறிவிக்கையின் இறுதி வடிவம் வெளியிடும் போது, தமிழக தென்னை நாா் விவசாயிகளின் கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.