

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் யாரும் மெரினா கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதோடு, கடற்கரையின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயலானது டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திர வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. புயல் தனது பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது: தமிழ்நாடு வெதர்மேன்
இந்த நிலையில், பலத்த காற்று வீசுவதாலும், பொதுமக்கள் வேடிக்கைப் பார்க்க கடற்கரைக்கு வருவார்கள் என்பதாலும் முன்னெச்சரிக்கையாக மெரினா கடற்கரையின் நுழைவாயில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. மக்கள் யாரும் கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜம் புயல் மற்றும் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 32 இடங்களில் கனமழை பெய்துள்ளது. 2 இடங்களில் மிக கனமழைபதிவாகியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மிக்ஜம் புயலாக வலுப்பெற்று சென்னைக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது.
இது டிசம்பர் 4ஆம் தேதி முற்பகலில் தெற்கு ஆந்திரம் - அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக் கூடும். அந்த வேளையில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மிக்ஜம் புயல் காரணமாக நாளை மற்றும் மறுநாள் தற்போது காசிமேடு கடற்கரை பகுதி கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால், காசிமேடு, திருவற்றியூர், துறைமுகம், சென்னை மெரினா, பட்டிணம் பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை போன்ற கடற்கரை பகுதிகளுக்கு வரக்கூடிய பொது மக்களை பாதுகாப்பு நலன் கருதி போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.