வெள்ளத்தில் மிதக்கும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை! அரசு நடவடிக்கை எடுக்குமா?

பெருமழை - வெள்ளம் காரணமாக சென்னை திருமழிசை சிட்கோ  தொழிற்பேட்டை நீரில் மூழ்கியுள்ளதால் தொழில் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வெள்ள நீரில் மிதக்கும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை.
வெள்ள நீரில் மிதக்கும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை.

புயலால் சென்னையில் ஏற்பட்ட பெருமழை - வெள்ளம் காரணமாகத் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை வெள்ளத்தில் மிதப்பதால்  தொழில்கள் முடங்கி,  பெரு நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த மழையால் சென்னையிலும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருக்கும் சிறு, குறுதொழில் நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 

திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்ட  திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. 

மழை விட்டு இரண்டு நாள்களான பிறகும்கூட இன்னமும் தண்ணீர் வெளியேறவில்லை. தண்ணீரை அகற்ற அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இங்குள்ள தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதுபற்றிக் கேட்டபோது, திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையின் தொழிலக உரிமையாளர்களில் ஒருவரான அனிதா உன்னிதன் கூறியதாவது:

திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் பல்வேறு முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பொருள்கள்கூட இங்குள்ள நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

கடந்த 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போதும் தொழிற்பேட்டை மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும், மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். 

இந்த ஆண்டும் கடந்த 2, 3 மாதங்களுக்கு முன்பே, மழையால் பாதிக்காத அளவுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு கடிதம் அளித்தோம். ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் நானும் தனிப்பட்ட முறையில் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இப்போது ஏற்பட்ட கனமழையால் சிட்கோ தொழிற்பேட்டை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை விட்டு மூன்று நாள்கள் ஆகியும் இங்குள்ள நீரை வெளியேற்றக்கூட அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுத் தரப்பில் நாங்கள் முறையிட்டும் தண்ணீர் தேங்கிய நிலையிலேயே இருக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் தேங்கும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கவே செய்கிறது. 

பல கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருள்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ளதால் யாரும் உள்ளே செல்லக்கூடிய நிலைமைகூட இல்லை. 

இதனால் தொழில்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, ஏன் தொழில் முழுவதும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறும் அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தண்ணீரை வெளியேற்றாமல், இன்னும் சில நாள்களுக்கு இதே நிலை தொடர்ந்தால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றும் இங்குள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இதேபோல இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தால் மீண்டும் பயன்படுத்தாத அளவுக்கோ, பழுதுபார்க்க முடியாத அளவுக்கோ நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்றும் அச்சம் தெரிவிக்கும் இவர்கள், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com