மின்கட்டண உயர்வால் தொழில்துறை பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி

கடும் மின்கட்டண உயர்வால் தொழில்துறை மின் நுகர்வோர், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மின்கட்டண உயர்வால் தொழில்துறை பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி

கடும் மின்கட்டண உயர்வால் தொழில்துறை மின் நுகர்வோர், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு, இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது என்றும், எனவே, மின் கட்டணங்களைக் குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு அரசு வரி விதிக்கும் போதும், கட்டணங்களை உயர்த்தும் போதும், எப்படி பசுவிடம் இருந்து பசு அறியாமலேயே பால் கறக்கிறோமோ அதுபோல், தொழில்முனைவோர் பாதிப்படையாத வகையில், அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறையாத நிலையில் செயல்பட வேண்டும். 

அளவுக்கு மீறி பசுவிடம் இருந்து பாலை உறிஞ்ச நினைத்தால், பசு ரத்தம் இன்றி மாண்டு போகக்கூடிய நிலை ஏற்படும். ஏனெனில், பசு தனது ரத்தத்தை பாலாக மக்களுக்கு வழங்குகிறது. அதுபோல், தொழில் முனைவோர்கள் தங்கள் முதலீடுக்கு நஷ்டம் இன்றி, தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ப ஊதியம் வழங்க ஏதுவாக, அதே சமயத்தில், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயைப் பெறக்கூடிய வகையில், சொத்து வரி உயர்வு, தொழில் வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றை தொழில் முனைவோர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் விதிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இக்கூட்டமைப்பினர் பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும்; நிறுவனத்தின் மேற்கூரையில் வங்கிக் கடன் பெற்று சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்வதற்கு மின் வாரியம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 153 பைசா கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும்; தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மொத்த மின்கட்டணத்தில் ஒன்றரை மடங்கு கட்டணத்தை முன்பணமாக ஏற்கெனவே மின் வாரியம் வசூலித்துள்ளது என்றும், இப்பணத்திற்கு அவர்கள் வங்கிகளில் 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று மின் வாரியத்திற்கு கட்டி உள்ளதாகவும் ஆனால், மின் வாரியம் 5.70 சதவீத வட்டி மட்டுமே வழங்குவதாகவும், இந்நிலையில் ஒரு கிலோ வாட்டுக்கு முன்பு இருந்த ரூ. 35/- கட்டணத்தை, 430 சதவீதம் உயர்த்தி ரூ. 153 என்று கட்டணம் விதித்துள்ளதால், தொழிற்சாலைகள் மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய ஒன்றரை மடங்கு முன்பணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும்; எனவே, தொழில் முனைவோர்கள் வங்கிகளுக்கு அதிக வட்டி தரவேண்டி உள்ளதால், முன்பு இருந்ததுபோல் ஒரு கிலோ வாட்டுக்கு 35 ருபாய் மட்டுமே நிலைக் கட்டணமாக விதிக்க வலியுறுத்துவதாகவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைக் காப்பற்ற இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com