விஜயராஜ் அழகர்சாமியிலிருந்து கேப்டன் வரை..!

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட விஜயராஜ் எப்படி விஜயகாந்த்தாக மாறினார்? 
விஜயராஜ் அழகர்சாமியிலிருந்து கேப்டன் வரை..!

மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட விஜயகாந்த்தின் இயற்பெயர், நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி. விஜயராஜ் என்கிற பெயரிலே உறவினர்கள், நண்பர்களால் அறியப்பட்டவர். வசதியான குடும்பத்தில் பிறந்தவர். படிப்பில் நாட்டமில்லாத விஜயராஜ், சிலகாலம் தனக்குச் சொந்தமான ரைஸ் மில்லை கவனித்து வந்தார். ஆனால். 70-களின் இறுதியில் யாரையும் விடாத சினிமா ஆசை விஜயராஜுக்கும் வந்தது. நாயகனாக உருமாற வேண்டும் என்கிற முடிவை எடுத்தவர், தன் நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தரை அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார்.

தன் அடையாளம் எதையும் முன்னிலைப்படுத்தாமல் ‘நாயகன்’ ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஒவ்வொரு ஸ்டூடியோவா ஏறி இறங்கும் விஜயராஜ்க்கு எந்தக் கம்பெனிகளும் நீங்கள்தான் நம் படத்தின் ஹீரோ என வாய்ப்பைக் கொடுக்கவில்லை. காரணம், நடிகர்கள் சுதாகர் போன்ற அழகான நடிகர்கள் திரைத்துறையில் வெற்றியாளர்களாக வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் கருப்பான இளைஞரான விஜயராஜுவை ஏளனமாகவே பார்த்திருக்கின்றனர். ஆனால், இந்தத் தோற்ற பிரச்னைகளை மனதில் ஏற்றிக்கொள்ளாதவர் தொடர்ந்து தன் முயற்சிகளை மேற்கொண்டார். 

காலம் கனிந்து இனிக்கத் துவங்கியதும் 1979 ஆம் ஆண்டு இயக்குநர் எம்.ஏ.காஜா கண்ணீல் பட்டவர் ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் ‘விஜயகாந்த்’ ஆக அறிமுகமாகிறார். ஆனால், வில்லனாக நடித்த அப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. தொடர்ந்து, ‘அகழ் விளக்கு’, ‘சாமந்திப்பூ’ உள்ளிட்ட படங்களின் நாயகனாக நடிக்கிறார். அனைத்துமே தோல்விப்படமாக அமைந்ததுடன் ரசிகர்கள் மத்தியிலும் விஜயகாந்த் சென்று சேரவில்லை! 

இன்னொரு புறம் தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்தை வைத்து படத்தைத் தயாரிப்பதை நிறுத்திக்கொள்ளும் முடிவுக்கு வந்தனர். கருப்பான இவருடன் நடித்தால் என் மார்க்கெட் என்ன ஆவது? என பல நடிகைகளும் ’விஜயகாந்த்தா”? என பயந்து ஜோடியாக நடிக்க தயக்கம் காட்டினர். இந்த பிரச்னைகள் எதைப் பற்றியும் கவலைப்படமால் எப்படியாவது ஒரு வெற்றியைக் கொடுத்து நாம் யாரென நிரூபித்துவிட வேண்டும் என்கிற வெறியில் முன்பை விட தீவிரமாக உழைத்து வந்தார் விஜயகாந்த். 

தோல்விகளால் தடுமாறிக்கொண்டிருக்கும் இருவர் இணைந்தால்? வெற்றியைக் கொடுக்க வேண்டும் என தவிப்பில் இருந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜயகாந்த்தும் இணைந்தனர். ‘சட்டம் ஒரு இருட்டறை’ அப்படித்தான் உருவானது. விஜயகாந்த்தின் சினிமா வாழ்க்கையே திருப்பிப் போட்ட திரைப்படமாக அது மாறியது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய மொழிகளில் ரீமேக் ஆன அளவுக்கு வெற்றி! விஜயகாந்த்தைத் தயாரிப்பாளர்கள் மெல்ல அணுகத் துவங்கினர். 

அதேநேரம், நடிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகுந்த கவனமாக இருந்தார். அதிகாரத்தை எதிர்க்கும் இளைஞராகவே தன்னை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கம்யூனிச இளைஞராக ‘சிவப்பு மல்லி’ படமும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக ‘சாதிக்கொரு நீதி’ படமும் விஜயகாந்த்தை கிராமப்புறங்களில் கொண்டு சென்றது.

இப்படங்களில் இடம்பெற்றிருந்த சில பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இணைந்திருந்தது. குறிப்பாக, ஆட்டோ ராஜாவில் இளையராஜா இசையமைத்திருந்த ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடல். இப்பாடல் ஒலிக்கப்பட்டபோதெல்லாம் விஜயகாந்த் சினிமா வாழ்வில் நம்பிக்கை விழுந்திருக்கிறது. 

ஒருகட்டத்தில் மினிமம் கியாரண்டி நடிகரானார். விஜியை நம்பி தயாரிக்கலாம் என்கிற நிலை. எந்த விஜயராஜ் 1979-ல் தன் முதல் தோல்வியைச் சந்தித்து ஓரங்கட்டப்பட்டாரோ அவரே விஜயகாந்த்தாக மாறி 1984-ல் 18 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த ஆண்டில் வெளியான படங்களே,  ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தாள்’. திரும்பிய பக்கமெல்லாம் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சம்’தான்! தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக மாறத்துவங்கினார் விஜயகாந்த். அடுத்த சில ஆண்டுகளில் கிராமப்புறக் கதைகள், நியாயத்தைத் தட்டிக்கேட்கும் இளைஞன் என ரசிகர்களின் விருப்ப நாயகராக மாறினார். 

விஜயகாந்த்தின் சினிமா வாழ்வில் உச்சம் என்றால் 1990 காலகட்டம்தான். புள்ளிவிவரங்களைக் கச்சிதமாச் சொல்லக்கூடியவர், தப்பு எங்கு நடந்தாலும் காவல்துறை அதிகாரியாக எதிரிகளை ஒழிப்பவர் ரீதியான கதைகள் வரிசைகட்டி வந்தன. குறிப்பாக, திரைக்கல்லூரியில் பயின்ற இயக்குநர்களின் முதல் தேர்வாக விஜயகாந்த்தே இருந்தார். சார், ‘இந்தப் படத்துல நீங்க கம்பீரமான போலீஸ்’ எனக் கதையை ஆரம்பித்தால் விஜயகாந்த்தின் தயாரிப்புகளைக் கவனித்துக்கொண்ட ராவுத்தவர் ‘பண்ணிடலாம் விஜி’ என்பாராம்! அந்த அளவிற்கு கதைகளும் முதல் படத்தை இயக்கும் ஆசையில் உள்ளவர்களும் விஜயகாந்த்தை சூழ்ந்திருந்த காலம்.

அப்படி அறிமுகமானவர்தான் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘புலன் விசாரணை’ படப்பிடிப்பு முடிந்ததும் விஜயகாந்த் உள்பட யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லையாம். ஆனால், புலன் விசாரணை வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. தவறாக ஒருவரைக் கணித்து விட்டோம் என வருந்திய விஜயகாந்த், ஆர்.கே.செல்வமணியை அழைத்து, ‘என் 100-வது படத்தை நீயே இயக்கு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. புலன் விசாரணை மாதிரி இருக்கணும்’ என்றிருக்கிறார்.

அந்தப் படம்தான் விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கைக்கான பெயரை சுமக்கக் காத்திருக்கிறது என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். உருவானது ‘கேப்டன் பிரபாகரன்’. நினைத்தே பார்க்க முடியாத வெற்றி, அதற்கு முன் எந்த நடிகர்களின் நூறாவது படமும் இப்படி வசூலைக் குவித்த வரலாறே இல்லை. ‘கேப்டன்’ என விஜயகாந்த்தை ரசிகர்கள்  கொண்டாடித் தள்ளினர்.  தொடர்ந்து, மாநகரக் காவல், சின்னகவுண்டர் என இரண்டாயிரம் வரை 50 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி எதிர்போட்டியாளர்களே இல்லாத நாயகன் என்கிற நிலைக்கு வருகிறார். நடிகர்கள் ரஜினி, கமல் ரசிகர்களும் விரும்பிப் பார்க்கக் கூடிய நடிகர் என்றால் அது விஜயகாந்த்தான் என பலரும் பதிவு செய்திருக்கின்றனர். 

2000-க்குப் பின் வல்லரசு,  வாஞ்சிநாதன், ராஜ்ஜியம், ரமணா போன்ற அநீதிக்கு எதிரானவராக நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அரசியல் கட்சியைத் துவங்கி தன் பாதைகளை மெல்ல மாற்றிக்கொண்டார். உடல்நிலை சரியாக இருந்திருந்தால் இன்று முதல்வராக இருந்திருப்பார் என்பதே அவர் ரசிகர்களின் ஆதங்கம். திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாருடைய நேர்காணலைப் பார்த்தாலும் விஜயகாந்த்தின் உதவிகளைக் குறித்து பேசியிருப்பதைக் காண முடிகிறது. உண்மையிலேயே, கொடை வள்ளலாகவே வாழ்ந்திருக்கிறார்! 

காலம் யாரை விட்டது? ஆனால் ஒருபோதும் ‘கேப்டன்’ என்கிற பெயரை விடாது! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com