கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை!

‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் திரையுலகில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் திரையுலகில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். 

இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். 

1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரை திருமங்கலத்தில் கே.என் அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி ஆகியோருக்கு மகனாக பிறந்தார் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆர் படங்கள் மீது தீராக்காதல் கொண்ட விஜயகாந்த், சினிமாவில் நடிகன் ஆக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை கடந்து 1979 ஆம் ஆண்டு எம்.ஏ.கஜா இயக்கத்தில் வெளிவந்த 'இனிக்கும் இளமை' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் அதே ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை பெற்று பிரபலமானவர். 

விஜயராஜ் என்ற தனது பெயரில் ராஜ் என்னும் வார்த்தையை தூக்கி காந்த் என்னும் வார்த்தையுடன் இணைத்து 'விஜயகாந்த்' என தனது பெயரினை மாற்றி அமைத்துக் கொண்டவர்.

1984 இல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.

இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார். 

1990-ஆம் ஆண்டு ஜனவரி 31 இல் நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகன் 'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த் பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் ல்  அறிமுகமாகினாலும், பின்னர் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கி நடித்து புகழ் பெற்றவர். 

இவரது நடிப்பில் 1981-ஆம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு அடையாளத்தினை பெற்று தந்துள்ளது. இவர் நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். 

ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்தது. 

விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான திரைக்கதை அம்சம், தேசப்பற்று படங்களாகவும் இருந்தது. 

இவர் இரட்டை கதாபாத்திரங்கள் மற்றும் காவலர், ராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் 'புரட்சி கலைஞர்' என்னும் பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரையுலக ரசிகர்கள் 'கேப்டன்' என்றே அழைக்கின்றனர். 

இவரது 100 ஆவது படமான 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்கு பின்னர் இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகாந்த் தமிழ் திரைப்படங்களில் நடிகனாக மட்டுமில்லாமல், தமிழக திரைப்பட சங்கம் தேர்தல்களில் போட்டியிட்டு 1999 இல் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பல கோடிகள் கடனில் உள்ள தமிழ் திரைப்பட சங்கத்தினை தனது சிறந்த வழிகாட்டுதலில் ஒரு முன்னணி திரைப்பட சங்கமாக உயர்த்தினார்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி நடிகர் சங்க கடனை வட்டியும் முதலுமாக அடைத்த பெருமை கேப்டன் விஜயகாந்துக்கு உண்டு. 

"தென்னிந்திய, அகில இந்திய' என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982-இல் தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்' எனவும் பெயர் மாற்றம் செய்தார்.

2000 -ஆம் ஆண்டு பிப்ரவரி 12-இல் ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகம் செய்தார்.

அதைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து 2005 செப்டம்பர் 14-இல் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்ற பெயரில் தனக்கென ஒரு கட்சியினை தொடங்கி புகழ் பெற்றார்.

இவர் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. பாமக பலமாக உள்ள விருத்தாசலம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றிபெற்றார். 2011-இல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவோடு விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ரிஷிவந்தியம் தொகுதியிலில் விஜயகாந்தும், அவரோடு 41 தேமுதிக உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் சென்றனர். பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டு,துணிவான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். 

இந்தக் காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே பால் விலை உயர்வு தொடர்பாகவும், இடைத்தேர்தல் தொடர்பாகவும் அனல் பரப்பும் விவாதம் நடைபெற்றது. அதோடு,அதிமுகவுடனான கூட்டணியும் முறிவுற்றது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சார்பில் விஜயகாந்த் முதல்வராக வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தலைச் சந்தித்தார். ஆனால்,அந்தத் தேர்தலில் விஜயகாந்த் உள்பட கூட்டணிக் கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர்.

2021-இல் தேர்தலில் தேமுதிக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.இந்தத் தேர்தலுக்கு முன்பிருந்தே விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

இவரது நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி - தமிழக அரசு விஜயகாந்துக்கு எம். ஜி. ஆர். விருது (1994), கலைமாமணி விருது (2001),சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009) ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளது. 

மேலும் இந்திய அரசால் 'சிறந்த குடிமகனுக்கான' விருது வழங்கி சிறப்பித்துள்ளது. 

இந்த நிலையில், விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை(டிச.28) உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com