விஜயகாந்துக்கு கரோனா உறுதி: மியாட் மருத்துவமனையில் போலீசார் குவிப்பு 

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கு கரோனா உறுதி: மியாட் மருத்துவமனையில் போலீசார் குவிப்பு 
Published on
Updated on
1 min read

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

விஜயகாந்துக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், இருமல், சளித் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அடுத்த சில நாள்களில் நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை.

இதையடுத்து நுரையீரல் ஆதரவு சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு,தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். இதன் காரணமாக அவா் படிப்படியாக நலம் பெற்றாா்.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து திங்கள்கிழமை (டிச.11) வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், விஜயகாந்த் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை(டிச.26) மாலை அனுமதிக்கப்பட்டார். 

இதனிடையே, விஜயகாந்த் 19 நாள்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவா் பூரண நலத்துடன் இருக்கிறாா். பரிசோதனை முடிந்து, இன்று வியாழக்கிழமை(டிச.28) வீடு திரும்புவாா் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கமான பரிசோதனையின் முடிவில் விஜயகாந்துக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை கொடுக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். 

இதனிடையே, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மருத்துவமனை வளாகம், விஜயகாந்த் இல்லத்தில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.