ஈரோடு: ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளர் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் புதன்கிழமை காலை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?
கே.எஸ்.தென்னரசு பிரிக்கப்படாமல் ஒரே தொகுதியாக இருந்த ஈரோடு தொகுதியில் 2001 தேர்தல், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என இரு தொகுதிதளாக பிரிக்கப்பட்ட பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
2021 தேர்தலில் அவர் போட்டியிட விரும்பிய நிலையில் கட்சி உத்தரவின்படி தமாகா வேட்பாளரான எம்.யுவராஜாவுக்கு இந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார்.
அதிமுக ஆளும்கட்சியாக இருந்த காலங்களில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்ததால் கட்சியினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்கு அறிமுகமானவாராக கே.எஸ்.தென்னரசு உள்ளார்.
இதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு கடும் போட்டியாக இருப்பார் என அதிமுகவினர் தெரிவித்தனர்.