அதிமுக எந்த கட்சியை நம்பியும் இல்லை: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

அதிமுக எந்த கட்சியை நம்பியும் இல்லை. பல கட்சிகளுக்கு உதவிகரமாக இருப்பதோடு அதிமுக அதனை தாங்கி பிடித்துக் கொண்டு உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணி தொடரும்
அதிமுக எந்த கட்சியை நம்பியும் இல்லை: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
Published on
Updated on
2 min read


திருநெல்வேலி: அதிமுக எந்த கட்சியை நம்பியும் இல்லை. பல கட்சிகளுக்கு உதவிகரமாக இருப்பதோடு அதிமுக அதனை தாங்கி பிடித்துக் கொண்டு உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணி தொடரும் என நெல்லையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவில், முன்னால் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. 

மணமக்கள் கரண்- அமச்சியார் ஆகியோரது திருமணத்தை திருமங்கால்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி  பேசுகையில்,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். 484 கோடி மதிப்புள்ள ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் இருந்து தனியாக கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெற்று சோதனையுடன் நடத்தி முடிக்கப்பட்டு திறக்கும் தருவாயில் இருந்தும் 21 மாதங்கள் ஆகியும் அந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை. 

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் கொடுக்காத அரசாக திமுக அரசு உள்ளது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலையை இந்த அரசு வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது டெல்டா மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட போது ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்த நிலையில், தற்போது ஏக்கருக்கு ரூ. 20,000 மட்டுமே வழங்கியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருந்த போது ஒரு பேச்சு என தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். 

மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் ஈரோடு மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். தலையில் வைத்து படுத்து தூங்கும் வகையில் தலையணைபோல் 520 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டு முக்கிய திட்டங்கள் எதனையும் இதுவரை செயல்படுத்தவில்லை. மகளிர் காண உரிமை தொகை ரூ.1000, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் உள்ளிட்டவைகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. திமுக அரசால் மக்கள் நாள்தோறும் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர். 

அதிமுக பல கட்சிகளுக்கு உதவிகரமாக இருப்பதோடு தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. பாஜக எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுக்கு நாள்கள் இருந்தாலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும். திமுக உடனான கூட்டணி கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகிறது. திமுக மட்டுமே அந்த கூட்டணியில் வளர்ந்து வருகிறது. திமுகவில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்கள். விரைவில் அந்த கட்சிகள் காணாமல் போய்விடும். 

மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு திமுக கூட்டணி கட்சியில் உள்ள கட்சிகள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் தவறில்லை. எழுதாத பேனாவை ரூ.80 கோடி செலவில் கடலில் வைப்பதை தவிர்த்து விட்டு, அதனை அவரது நினைவு மண்டபத்திலேயே வைத்துக் கொள்ளலாம். ரூ.1 கோடிக்கு பேனாவை நினைவுச் சின்னமாக வைத்துவிட்டு மீதமுள்ள ரூ.79 கோடியை  மாணவர்களுக்கு எழுதக்கூடிய பேனாவை வழங்கலாம். இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இந்த வெற்றி வரும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என பழனிசாமி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com