காஞ்சிபுரம்: கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா 

காஞ்சிபுரம் அருகே முதலாம் ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலுக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீந்தமிழால் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்: கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா 

காஞ்சிபுரம் அருகே முதலாம் ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலுக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீந்தமிழால் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கூழமந்தல் கிராமம். இது திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுக்காவில் அமைந்துள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி வாகை சூடி வந்தது நினைவாக, தொண்டை நாட்டில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் விக்ரம சோழபுரம் என்று அழைக்கப்பட்ட இவ்ஊரில் சோழர் குல சக்கரவர்த்தி ராஜராஜ சோழருக்கும், ராஜேந்திர சோழருக்கும்,குல குருவாக இருந்த ஈசான சிவ பண்டிதர் என்பவரால் உருவாக்கப்பட்ட கோயில் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை உத்தர ஸ்ரீ கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் திருக்கோயில். 

இக்கோயிலை சுற்றிலும் உள்ள நிலைத்தினை விட,  தாழ்நிலை தரைமட்டம் கொண்டதாக எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தரையில் அமைந்துள்ளது.

கருவறை விமானம்,  அர்த்தமண்டபம்,  இடைநாடி , மகா மண்டபம் என நான்கு பிரிவுகளாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது.தெற்கு, கிழக்கு,  வடக்கு என மூன்று திசைகளிலும் மகா மண்டபத்திற்குள் செல்ல வாயில்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு வாயிலின் முன் நந்தி வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நந்தியின் அமைப்பு தலை சாய்ந்த நிலையில் இருப்பதும், இது பக்தர்களின் கோரிக்கையை செவிமடுத்து கேட்பதற்கு என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

திருக்கோயில் விமானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கல்வெட்டுகளில் எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல பல சிறப்பு மிக்க பெருமை கொண்ட இத்திருத்தலத்தின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா  வரும் மார்ச் 5  ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்றதா என்ற தகவல் கூட இதுவரை கிடைக்காத நிலையில், கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இதற்கு அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை.

இதுகுறித்து விழா குழுவினர் தெரிவிக்கையில், எங்களது முன்னோர்கள் கூட குடமுழுக்கு விழா நடைபெற்றதா என்பதை அறியாத நிலையில், தற்போது இதனை முன்னேற்று நடத்துவது கிராமத்திற்கு மட்டுமல்லாமல்,  மன்னர்களின் கலைநயத்தை பறை சாற்றுவதும், அதனை பொக்கிஷமாக பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது.

திருக்குடமுழுக்கு விழா மார்ச் 3 ஆம் தேதி பிள்ளையார் வழிபாடுடன் துவங்கி , பல்வேறு நிகழ்ச்சிகள்  காலை, மாலை  என நடைபெற்று, நிறைவாக 5 ஆம் தேதி காலை 10:45 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.

குடமுழுக்கு விழாவானது முற்றிலும் திருநெறிய தீந்தமிழால் ஆடலரசன் அறக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்களால் இணைந்து நடத்தப்படுகிறது.

பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இவ்விழாவை காண அப்பகுதி மட்டுமல்லாமல் அனைத்து வரலாற்று ஆர்வலர்களும், பக்தர்களும் காத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com