புகைப்படக்காரர் மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு இன்று திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு இன்று திங்கள்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"தி இந்து (The Hindu) ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.சீனிவாசன் (வயது 56), இன்று (02.01.2023) அதிகாலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான  பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

கே.வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 மேலும், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த திரு.கே.வி. சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com