ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ அரசு வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடைபெறும். அதன்படி நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தக் கூடாது.
போட்டியின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதியளிக்கப்படும். பார்வையாளர்கள் அனைவரும் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் இரு தினங்களுக்கு முன்பு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைதிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்களுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை. காளை அவிழ்த்துவிடப்படும் நேரத்திலிருந்து அனைவரும் நிகழ்வுகளுக்கு விடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
போட்டிக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். போதிய அளவில் காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு இருக்க வேண்டும். விதிகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்தச் செயலும் அனுமதிக்கப்படாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.