ஆளுநருக்கு எதிராக பேரவையில் திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்   திங்கள்கிழமை கூடியது.
ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பிய திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள்
ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பிய திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள்


சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்   திங்கள்கிழமை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது.

சட்டப்பேரவை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கூடியது.  ஆளுநர் ஆர். என். ரவி உரை நிகழ்த்துவதற்காக காலை 9.55 மணிக்கு பேரவைக்கு வருகை தந்தார். அவருக்கு பேரவை வாசலில் பேண்டு வாத்தியத்துடன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து ஆளுநரை, பேரவைத் தலைவர் அப்பாவு, பேரவைச் செயலாளர்கள் சீனிவாசன் ஆகியோர் மரபுப்படி பேரவைக்குள் அழைத்து வந்தனர். சரியாக 10.01 மணிக்கு ஆளுநர் அவைக்குள் வந்தார். அவர் வருவதற்கு முன்னதாகவே முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் அமர்ந்து இருந்தனர்.

ஆளுநர் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் இருக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். உடனே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசினார். 

இதைத் தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வாழ்த்துகளையும் தமிழில் கூறினார். துண்டுச் சீட்டில் எழுதி வைத்திருந்த வாசகங்களை வைத்து தமிழில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஆளுநர் தமிழில் தனது உரையை பேசத் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் இருக்கையை விட்டு ஆளுநர் அருகே வந்து அவர் முன்பு கோஷங்களை எழுப்பினார்கள்.

'வாழ்க வாழ்க தமிழ்நாடு' வாழ்கவே', எங்கள் நாடு தமிழ்நாடு... உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். சுமார் 8 நிமிடங்கள் அவர்கள் கையை உயர்த்தியபடி கோஷமிட்டனர். ஆனாலும் ஆளநர் அதை கண்டுகொள்ளாமல் தனது உரையை வாசித்துக் கொண்டு இருந்தார். ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பிய திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆளுநரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பும் வரை நின்று கொண்டிருந்த பாமக உறுப்பினர்கள் கோஷம் போடத் தொடங்கினார்கள். 

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய், மசோதாவிற்கு அனுமதி கொடுங்கள் போன்ற முழக்கங்களை எழுப்பினார்கள். 

ஒரு துண்டுச் சீட்டில் ஆங்கிலத்தில் எழுதிய வாசகங்களை ஆளுநர் முன் ஏந்தி முழக்கமிட்டனர். அதன்பிறகு ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக உறுப்பினரும் ஆளுநர் உரையை புறக்கணித்து பேரைவயில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் இன்றைய பேரவைக் கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

முதல்வர் குற்றச்சாட்டு 
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சில விமர்சனங்களை முன்வைத்து பேசிக்கொண்டிருக்கும்போதே, கோவமாக பாதியிலேயே ஆளுநர் ரவி வெளியேறினார். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என குற்றம்சாட்டினார். 

ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.  ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து, நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம்.

எங்கள் கொள்கைக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைக்கு மாறாகவும் ஆளுநர் நடந்துகொண்டார். 

அரசு தயாரித்த, ஆளுநரால் இசைவளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை முறையாக படிக்காதது வருந்தத்தக்கது. முறைப்படி பேரவைக் கூட்டம் முடியும் முன்னரே அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார ஆளுநர் ரவி என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஆளுநர் படிக்காமல் தவிர்த்த வாரிகள்
சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இந்த அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com