வங்காநரி வழிபாடு நடத்திய 4 கிராமங்களுக்கு வனத்துறை ரூ. 3.90 லட்சம் அபராதம்

வங்காநரி வழிபாடு நடத்திய 4  கிராமங்களுக்கு  வனத்துறை ரூ. 3.90 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
கொட்டவாடி கிராம மக்கள் பிடித்து வழிபாடு நடத்திய வங்காநரி.
கொட்டவாடி கிராம மக்கள் பிடித்து வழிபாடு நடத்திய வங்காநரி.

வங்காநரி வழிபாடு நடத்திய 4  கிராமங்களுக்கு  வனத்துறை ரூ. 3.90 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், பொங்கல் பண்டிகை தருணத்தில் வங்காநரி பிடித்து  வழிபாடு நடத்திய கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், தமையனூர் ஆகிய 4 கிராமங்களுக்கும், வாழப்பாடி வனத்துறையினர் ரூ.3.90 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனுார், தமையனுார் உள்ளிட்ட கிராமங்களில், 200 ஆண்டுக்கு மேலாக  பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று, வங்காநரி வழிபாடு நடைபெற்று வருகிறது.

காணும் பொங்கலன்று கிராமத்தை யொட்டியுள்ள தரிசு நிலங்களில் வலை விரித்து காத்திருந்தும், கிராம மக்கள் வங்காநரியை பிடித்து, தாரை, தப்பட்டை மேள வாத்தியங்கள் முழங்க  கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று கோயிலில் வைத்து  வழிபட்டு வருகின்றனர்.  

அப்போது,  நரியின் காலில் கயிற்றைக் கட்டி கோயில் மைதானத்தில் ஓடவிட்டு, கிராம மக்களுக்கு காண்பிப்பதால் இது நரியாட்டம் அல்லது வங்காநரி ஜல்லிக்கட்டு என அழைக்கப்பட்டது. இதற்கு வனத்துறை தடை விதித்ததால், வங்காநரி ஜல்லிக்கட்டு, நரியாட்டம் நடத்துவதை இப்பகுதி மக்கள் கைவிட்டனர்.

ஆனாலும், இந்த பாரம்பரிய வங்காநரி வழிபாட்டு முறையை கைவிட  மனமில்லாத கிராம மக்கள், பொங்கல் பண்டிகை தருணத்தில் வங்காநரி பிடித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கொட்டவாடி கிராமத்தில் புதன்கிழமையும், சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில் வியாழக்கிழமையும், ரெங்கனூர் மற்றும் தமையனூர் கிராமங்களில் ஞாயிற்றுக் கிழமையும்  வங்காநரி பிடித்துச் சென்று, மாரியம்மன் கோவிலில் வைத்து  சிறப்பு பூஜை  வழிபாடு நடத்தி கிராம மக்கள் பொங்கல் பண்டிகை நிறைவு செய்தனர். இதன்பிறகு வங்காநரியை பிடித்த இடத்திற்கே கொண்டு சென்று விட்டுவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர்,  வங்காநரி பிடித்து வழிபாடு நடத்தி,  4  கிராம மக்களுக்கும், வன விலங்கு வேட்டையாட முயன்றதாக, மாவட்ட வன அலுவலர் ஷசாங் ரவி உத்தரவின் பேரில் ரூ.3.90 லட்சம் அபராதம் விதித்து வசூலித்துள்ளனர்.

வங்காநரி வழிபாடு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி, இனிவரும் ஆண்டுகளில் வனத்துறை அபராதம் விதிப்பதை கைவிட வழிவகை செய்ய  வேண்டுமென, இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com