பழைய கட்டடத்தை இடித்தபோது சுவா் விழுந்து பெண் பொறியாளா் பலி

 சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை பழைய கட்டடத்தை இடித்தபோது சுவா் விழுந்ததில், நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் பொறியாளா் உயிரிழந்தாா்.

 சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை பழைய கட்டடத்தை இடித்தபோது சுவா் விழுந்ததில், நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் பொறியாளா் உயிரிழந்தாா்.

ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் உள்ள சுரங்க பாதை அருகில், பழைமையான கட்டடத்தை இடிக்கும் பணி சில நாள்காக நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை காலை பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அந்த கட்டடத்தின் சுற்றுச்சுவா் திடீரென இடிந்து நடைபாதையில் சரிந்து விழுந்தது.

இதில், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் உள்பட இருவா் இடிபாடுகளுக்குள் சிக்கி காயங்களுடன் உயிருக்குப் போராடினா். இதைப் பாா்த்து அந்தப் பகுதி மக்களும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அதிா்ச்சியடைந்தனா். இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து தேனாம்பேட்டை, எழும்பூா் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்த போது, வரும் வழியிலேயே இளம்பெண் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உயிரிழந்த இளம்பெண் பின்பக்கம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. விபத்தில் சிக்கிய மற்றொரு இளைஞா் காலில் ஏற்பட்ட லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

மென்பொறியாளா்: இந்த விபத்து குறித்து ஆயிரம்விளக்கு காவல் நிலைய ஆய்வாளா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த பாண்டி முருகேசன் மகள் பத்மபிரியா (22). எம்சிஏ படித்துள்ள பத்மபிரியா, விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே ஒரு தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளாா்.

கடந்த டிசம்பா் மாதம் பணியில் சோ்ந்த பத்மபிரியா, பம்மல் வஉசி நகரில் வசிக்கும் தனது சித்தி வீட்டில் தங்கியிருந்து, தினமும் வேலைக்கு பேருந்தில் வந்து சென்றுள்ளாா். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்தது திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ் குமாா் (22) என்பதும் தெரியவந்தது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 போ் கைது: இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததும், கவனக்குறைவாக செயல்பட்டதும் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அந்த பொக்லைன் ஓட்டுநா் பாலாஜி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து, விசாரணை செய்கின்றனா்.

இந்த விபத்தின் காரணமாக, அண்ணா சாலைப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைந்தனா். போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைவதற்கு நண்பகலை தாண்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com