கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் காக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி!

எல்லாக் கோப்புகளையும் முழுமையாக ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்றும் தந்திரமான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்கிறார்

News image

எஸ். ரகுபதி (கோப்புப் படம்)

Updated On :6 ஜூலை 2023, 3:36 pm


புதுக்கோட்டை: எல்லாக் கோப்புகளையும் முழுமையாக ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்றும் தந்திரமான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்கிறார் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு அவர் அளித்த பேட்டி:

முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி விஜயபாஸ்கர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்வது தொடர்பான அனுமதி கோரும் கோப்புகள் கடந்த 2022 செப். 12ஆம் தேதி அரசிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு, 'சட்டப்படியான விசாரணை' நடைபெற்று வருவதாக மழுப்பலான பதிலை ஆளுநர் தந்திருக்கிறார். யார் விசாரணை நடத்துகிறார்கள் என்பதை விளக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு தொடர்வதற்காக முழுமையான கோப்புகள் ஆளுநருக்கு கடந்த 2022 செப். 12ஆம் தேதி அனுப்பியிருக்கிறோம். ஆனால், 'ஆதன்டிகேட்டட் காப்பீஸ்' வரவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கிறது. முழுக் கோப்புகளும் அவரிடம் இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்வதற்காக கடந்த 2022 மே 15ஆம் தேதி அரசிடமிருந்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எதுவும் வரவில்லை என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஏன் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக செய்திக்குறிப்பை வெளியிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. உண்மைக்குப் புறம்பான கருத்துகளை ஆளுநர் மாளிகை வெளியிட்டால், பொதுமக்கள் இனி ஆளுநர் மாளிகை அறிவிப்புகளை நம்புவார்களா?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும், முன்னாள் அமைச்சர்கள் மீது பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று வழக்கு தொடர்வதற்கான முன்மொழிவுகளை தலைமைக் குற்றவியல் வழக்குரைஞரிடம் பெற்று மேற்கொள்ள இருக்கிறோம்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்றும் வகையிலும், திமுக அரசைப் பழிவாங்கும் வகையிலும் இரட்டை வேடம் போடுகிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சமாட்டார். பழிவாங்கவும் விடமாட்டார். ஆளுநர் அரசியல் செய்யக் கூடாது எனப் பலரும் சொல்கிறார்கள். அவற்றைக் கேட்டு அவர் திருந்த வேண்டும்.

தெலங்கானா, மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கெனவே ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. எங்கள் முதல்வர் ஸ்டாலின் பொறுமையாக இருக்கிறார். அவரது பொறுமைக்கும் எல்லை உண்டு.

இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வரவில்லை. பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட குறிப்புதான் கிடைத்திருக்கிறது. எனவே, முதல்வரின் ஆலோசனை பெற்று, பதில் கடிதமாகக் கொடுப்பதா அல்லது பத்திரிகைக் குறிப்பாக பதில் அளிப்பதா என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்றார் ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.