குடிநீர் குழாய் பழுதால் குடிநீரை விலைக்கு வாங்கும் பொதுமக்கள்!

பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் பழுது ஏற்பட்டு சரி செய்யாத நிலையில் குடிநீரை விலைக்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டியாம்பட்டி பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் முறையான குடிநீர் கிடைக்காததால் தண்ணீரை விலைக்கு வாங்கும் பொதுமக்கள்.
பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டியாம்பட்டி பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் முறையான குடிநீர் கிடைக்காததால் தண்ணீரை விலைக்கு வாங்கும் பொதுமக்கள்.


பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 ஆவது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் பழுது ஏற்பட்டு சரி செய்யாத நிலையில் குடிநீரை விலைக்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 18 ஆவது வார்டு எட்டியாம்பட்டி முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் சின்னாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் எட்டியாம்பட்டி மற்றும் முள்ளுவாடி பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பென்னாகரம் பேரூராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்த நிலையில், குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் உடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அன்றாட தேவைக்கான குடிநீரை பெற இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாச்சானூர் பிரிவு சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய கை பம்பு மூலம் தண்ணீரை எடுத்து வந்தனர். 

இப்போது ஆழ்துளை கிணற்றில் போதுமான குடிநீரை பெற முடியாத நிலை ஏற்பட்டதால், எட்டையாம்பட்டி மற்றும் முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 லிட்டர் தண்ணீர் ரூ.30, அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் குடிநீர் குடம் ரூ.5 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 

இதனை அறிந்த 18 வது வார்டு உறுப்பினர் சுமித்ரா சந்தோஷ் குடிநீர் குழாய் சரி செய்யும் வரையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மூன்று டேங்கர் குடிநீரை வழங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து முறையான குடிநீர் வினியோகம் செய்வதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com