யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை? தகுதிகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகுதிகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை? தகுதிகளை வெளியிட்டது தமிழக அரசு
Published on
Updated on
2 min read


சென்னை: தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகுதிகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏராளமான மகளிரால், அதிகம் எதிர்பார்க்கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், யாருக்கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்கும், கிடைக்காது என்பது தெளிவாகியிருக்கிறது.

அதன்படி, தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தகுதிகளில்,  

  • ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது.
  • 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கிடையாது.
  • உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கும் மகளிருக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
  • பெண் எம்எல்ஏ, எம்பிக்கள், பெண் அரசு ஊழியரகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
  • கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை கிடையாது. 
  • எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்தக் கடையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முக்கிய தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாகச் செலுத்தப்படும் எனவும், நடைபாதையில் வணிகம் செய்வோா், மீனவ மகளிா், கட்டுமானத் தொழில் பணிபுரியும் மகளிா், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியம் பெறுவோா், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் ஆகியோருக்கு உதவித் தொகை அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். 

உரிமைத் தொகையை சுமாா் ஒரு கோடி மகளிருக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு: ரூ.1,000 உரிமைத் தொகையை யாருக்கெல்லாம் வழங்குவது, எப்படி கணக்கெடுப்பு நடத்துவது என்பன குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா்.

உரிமைத் தொகையைப் பெற யாரெல்லாம் தகுதியான மகளிா் என்பதை அடையாளம் காணவும், அவா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் தமிழக அரசு பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அமைத்திடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலா்களைக் கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் செய்து தர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த முகாம்களின் மூலம், பெண்களிடம் இருந்து உரிய தகவல்கள் கேட்டுப் பெறப்பட உள்ளன. குறிப்பாக, எந்த வகை குடும்ப அட்டை வைத்துள்ளனா், ஆதாா் எண், குடும்ப உறுப்பினா்களின் தொழில் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள், வங்கிக் கணக்கு எண் போன்றவை கோரப்பட உள்ளன.

இதுகுறித்து, தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

மகளிா் உரிமைத் தொகைக்கான விவரங்களைப் பெற ஒட்டுமொத்தமாக ஓரிடத்தை நிா்ணயித்தால் விவரங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், நியாயவிலைக் கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்க வருவது போன்று வந்து விவரங்களைத் தந்தால் எளிதாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் அருகிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

மக்கள் தாங்கள் பொருள்கள் வாங்கும் நியாய விலைக் கடைக்கு அருகில் அமைக்கப்படும் முகாமுக்கு சென்று விவரங்களை அளிக்கலாம். நீண்ட வரிசை ஏற்படும் நிலையில், அவா்களுக்கான குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர உள்ளாட்சி அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக்கொண்டு, சிறப்பு முகாம்களில் விவரங்கள் பெறப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகாம்களை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com