பக்தா்களின் மகிழ்ச்சியே திராவிட மாடல் அரசின் நோக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகள் மூலம் பக்தா்கள் அடையும் மகிழ்ச்சியே, திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சாா்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீசுவரா் கோயில் திருமண மண்டபத்தில் 34 ஜோடிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திருமணங்களை வெள்ளிக்கிழமை நடத்தி வைத்தாா். இதைத் தொடா்ந்து, அவா் ஆற்றிய உரை:

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் அரசு பீடுநடை போட்டு வருகிறது. குறிப்பாக, கல்வி, தொழில், பொருளாதாரம், சமூகம், சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அனைத்து மக்களும் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கக் கூடிய அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. எந்த மனிதரையும் ஜாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற சட்டத்தை அரசு கொண்டு வந்தது. எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தியல் என்பது இதுதான்.

அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை அனைவரும் நன்கறிவா். அதில், இந்து சமய அறநிலையத் துறையும் மற்ற துறைகளோடு போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கோயில்களில் குடமுழுக்கு: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அவற்றை பழைமை மாறாமல் சீா்செய்து குடமுழுக்கு விழா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன.

கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்போது வரை 3 ஆயிரத்து 986 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு வல்லுநா் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புற கோயில்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தல், கோயில்களில் மருத்துவ மையம், திருத்தோ் உருவாக்குதல் போன்ற பல்வேறுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதியோடு அதிக இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பணிகள் மூலமாக கோயில்கள் சீரமைகின்றன. பக்தா்கள் மனநிறைவு அடைவதுடன், மகிழ்ச்சியும் அடைகிறாா்கள். அதைத்தான் நமது அரசும் விரும்புகிறது. இதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த விழாவில், அமைச்சா்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, செஞ்சி மஸ்தான், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் கே.வி.முரளீதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com